புதுடெல்லி: நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. இதையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய குடிமக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘புத்தாண்டின் மகிழ்ச்சியான தருணத்தில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். புதிய ஆண்டு புதுப்பிக்கப்பட்ட ஆற்றலையும், நேர்மறையான மாற்றத்தையும் குறிக்கிறது. இது சுய பிரதிபலிப்பு மற்றும் புதிய தீர்மானங்களுக்கான ஒரு வாய்ப்பாகும்.
இந்த சந்தர்ப்பத்தில், நாட்டின் வளர்ச்சி, சமூக நல்லிணக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நமது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துவோம். நமது வாழ்வில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பை கொண்டு வந்து, வலுவான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க புதிய ஆற்றலை புகுத்தட்டும்’ என தெரிவித்துள்ளார்.
பிரதமர்: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு, எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், அனைவருக்கும் 2026 புத்தாண்டு வாழ்த்துகள்! இந்த புத்தாண்டு அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் வெற்றியுடன் கூடிய நிறைவான வாழ்வை கொண்டு வரட்டும். நமது சமூகத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிலவ இறைவனை வேண்டுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ராகுல்: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள வாழ்த்து ெசய்தியில், ‘அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், வெற்றியையும் கொண்டு வரட்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.
கார்கே: காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விடுத்துள்ள எக்ஸ் வலைதள பதிவில், ‘நம்முடைய அரசியலமைப்பையும், ஜனநாயக மாண்புகளையும் பாதுகாப்போம். குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்போம். சமூகத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.
