சேலம்: முன்னணி நிர்வாகிகள் வெற்றிபெற முடியாது என்பதுடன் 25 தொகுதிகள் வரை பறிபோகும் நிலை உள்ளதால், ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு தென் மாவட்ட மாஜி அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் பிரிந்து செயல்பட்டது.
ஆட்சி பறிபோகும் நிலையில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு துணை முதல்வர் பதவி கொடுத்ததுடன், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருந்தார். ஆட்சி முடியும் நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பின்னர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது அணியில் இருந்த எம்எல்ஏக்கள் வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன் ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதையடுத்து பாஜவுடன் கூட்டணி சேர்ந்த ஓ.பன்னீர்செல்வத்தை நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வைத்தது. அதிலும் அவர் தோல்வியையே சந்தித்தார். என்றாலும் அதிமுகவில் சேருவதையே அவர் விரும்பினார். ஆனால் அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வதை சேர்க்கவே முடியாது என எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்தார்.
மாஜி அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி, அன்பழகன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியும் எதுவும் நடக்கவில்லை. அதேநேரத்தில் டிடிவி தினகரனும், அமமுக என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு இன்னும் 3 மாதங்களில் தேர்தல் வருகிறது. அதிமுக கூட்டணியில் பாஜவும், ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் மட்டுமே இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த த.வெ.க கூட்டணிக்கு வர மறுத்துவிட்டது. முதல்வர் வேட்பாளராக விஜய்யை ஏற்றுக்கொண்டால் மட்டுமே கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக கூறும் த.வெ.க.வினர், பாஜவை கொள்கை எதிரியாக பார்க்கிறார்கள். முதல்வர் கனவு மற்றும் பாஜவை விட்டு வெளியே வந்தால் கூட்டணி சேரலாம் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கூட்டணி முடிவை ஓ.பன்னீர்செல்வம் எடுக்கலாம் என்ற அனுமதியை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கொடுத்துவிட்டனர். எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என டி.டி.வி. தினகரன் திட்டவட்டமாக கூறிவிட்டார். ஓ.பன்னீர்செல்வமும் அதே முடிவை எடுத்துள்ளார்.
இதனால் பாஜ- அதிமுக கூட்டணியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் எந்த முடிவும் எடுக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி இருந்தார். ஆனால் இருவரும் எடப்பாடி அணிக்கு எதிராக திரும்பியதால் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா மற்றும் பிரிந்து கிடக்கும் நிர்வாகிகளை கட்சியில் சேர்த்தே ஆக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிமுக நிர்வாகிகள், மூவரையும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று சில நாட்களாக வற்புறுத்தி வருகின்றனர். மாஜி மந்திரிகளான செல்லூர் ராஜு, உதயகுமார், ராஜன்செல்லப்பா உள்ளிட்ட தலைவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பிட்டு சொல்லும் வகையில் கூட்டணி அமையவில்லை. பாஜவை சேர்த்ததில் எந்த புண்ணியமும் இல்லை. இருக்கிற ஓட்டுக்கள் கூட கிடைக்காது.
நடிகரும் கட்சி தொடங்கிவிட்டார். பெரும்பாலும் அதிமுக ஓட்டுக்கள் அங்கு தான் செல்லும். ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலாவின் ஆதரவாளர்களால் அதிமுக ஓட்டுக்கள் தான் பிரியும். இதனால் முன்னணி நிர்வாகிகள் கூட வெற்றி பெற முடியாத நிலைதான் ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் சுமார் 25 தொகுதிகள் பின்னடைவை சந்திக்கும் எனவும், தொகுதிக்கு 10 ஆயிரம் ஓட்டுக்கள் குறைந்தது என்றாலும் வெற்றி பெறுவது முடியாத காரியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் தொகுதிகள் குறைந்துபோனால் ஆட்சியை பிடிக்க முடியாது எனவும் கூறியுள்ளனர். இவ்வளவு விவரத்தையும் சொல்லிய அவர்கள், அவர்களை சேர்ப்பதும், சேர்க்காமல் இருப்பதும் உங்களது முடிவு எனவும் கூறி எடப்பாடியிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டனர்.
நீண்ட யோசனைக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டியை கட்சியில் சேர்க்கலாம் என்ற முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி வந்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரிடம் இருந்து மதுரை வட்டாரத்தில் தகவல்கள் பரவியிருக்கிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், ‘‘ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை கட்சியில் சேர்த்தால் பல்வேறு இன்னல்கள் வரும் என்ற காரணத்தினால் அவரை எடப்பாடி சேர்க்கவில்லை.
ஆனால் கூட்டணி ஏதும் இல்லாத நிலையில் ஓட்டுக்கள் சிதறி ஆட்சியை பிடிக்க முடியாத நிலை ஏற்படும். மேலும் தோல்வியடைந்தால் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக ஆகி விடுவார். ஆனால் கட்சியினர் எந்த பவரும் இல்லாமல் இருப்பார்கள். இதையெல்லாம் எடுத்து கூறிய நிலையில் எடப்பாடி பழனிசாமி யோசித்து வருகிறார்.’’ என்றனர்.
