பெரம்பூர்: சென்னை ஐகோர்ட் வளாகத்தில் சுற்றித்திரிந்த 27 நாய்களை நேற்று அதிகாலை 4 மணியளவில் மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். அவற்றை பேசின் பிரிட்ஜ் பகுதியில் உள்ள மாநகராட்சி நாய்கள் காப்பகத்தில் அடைத்தனர். இவற்றில் சில நாய்கள் கருத்தடை செய்யப்பட்டது. பிடிபட்ட நாய்களுடன் ஆறு மாத குட்டி நாய்களும் இருந்துள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த விலங்குகள் நல ஆர்வலர்கள், நாய்கள் காப்பகத்திற்கு சென்று ஏற்கனவே பிடிபட்ட நாய்களுடன் குட்டி நாய்கள் உட்பட 27 நாய்களை ஒன்றாக அடைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கருத்தடை செய்யப்பட்ட நாய்களை வெளியே விடுமாறு தெரிவித்தனர்.
இதனால் மாநகராட்சி அதிகாரிகளுக்கும், விலங்குகள் நல ஆர்வலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று பேசின் பாலம் காவல் நிலைய போலீசா நாய் ஆர்வலர்களை சமாதானம் செய்தனர்.தெரு நாய் தொல்லை தொடர்பாக புகார் வந்தால் உள்ளாட்சி அமைப்பின் ஊழியர்கள் சென்று தெரு நாய்களை பிடித்து அவற்றுக்கு கருத்தடை செய்து, ரேபிஸ் நோய் தடுப்பு மருந்து கொடுத்து, பின்னர் பிடித்த இடத்திலேயே விட வேண்டும் என விதிமுறை உள்ளது. இதை மீறி, ஐகோர்ட் வளாகத்தில் பிடித்த நாய்களை அதுவும் ஏற்கனவே கருத்தடை செய்யப்பட்ட, ஆறு மாத குட்டி நாய் உள்பட 27 நாய்களை பிடித்து வந்துள்ளனர். இதில், இரண்டு நாய் இறந்தன.
இந்த காப்பகத்தில் ஏற்கனவே 150 நாய்கள் உள்ளன. இவற்றுடன் இந்த நாய்களையும் விட்டால் என்ன நியாயம். இங்கு போதிய சுகாதார மற்றும் பாதுகாப்பு வசதிகள் இல்லை. இந்நிலையில், ஐகோர்ட் உத்தரவு எனக்கூறி அதிகாலையில் நாய்களை விதிமுறைகளை மீறி பிடித்து வந்துள்ளனர் என விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்தனர். போலீசாரின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து விலங்குகள் நல ஆர்வலர்கள் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு பிடிபட்ட நாய்களை மாநகராட்சி அதிகாரிகளிடமிருந்து மீட்டுச் சென்றனர்.
