×

இந்தியாவில் இல்லை நான் துபாயில் இருக்கிறேன்: உஸ்மான் ஹாடியின் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர் வீடியோ

துபாய்: வங்கதேச மாணவர் தலைவர் உஸ்மான் ஹாடியின் கொலை வழக்கில் ஒரு திருப்பமாக, முக்கியக் குற்றவாளியான பைசல் கரீம் மசூத் என்பவர் தான் துபாயில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் டாக்காவில் வங்கதேச மாணவர் சங்க தலைவர் உஸ்மான் ஹாடியை சுட்டுக் கொன்றதாக பைசல் கரீம் மசூத் என்பவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் அவர் இந்தியாவுக்கு தப்பி ஓடி விட்டதாகவும், அவருக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்து வருவதாகவும் வங்கதேசம் குற்றம் சாட்டியது. இதை இந்தியா மறுத்து வந்தது. இந்த நிலையில் நான் துபாயில் இருக்கிறேன் என்று விளக்கம் அளித்துள்ள பைசல் கரீம் மசூத், தனது ஐக்கிய அரபு அமீரக விசா புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பைசல் கரீம் மசூத் கூறியிருப்பதாவது:
நான் பைசல் கரீம் மசூத். வங்கதேச மாணவர் தலைவர் உஸ்மான் ஹாடியின் கொலையில் எனக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லை என்பதை நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன். இந்த வழக்கு முற்றிலும் பொய்யானது மற்றும் ஒரு புனையப்பட்ட சதியின் அடிப்படையிலானது. இந்தத் தவறான குற்றச்சாட்டின் காரணமாக, நான் நாட்டை விட்டு வெளியேறி துபாய்க்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. என்னிடம் ஐந்து வருட செல்லுபடியாகும் பலமுறை நுழையக்கூடிய துபாய் விசா இருந்தபோதிலும், நான் மிகுந்த சிரமத்துடன் இங்கு வந்தேன். எனது குடும்பத்தினருக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் தவறாகச் சிக்க வைக்கப்பட்டு, கடுமையாகத் துன்புறுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை. என் குடும்பத்தினருக்கு இழைக்கப்படும் இந்த மனிதாபிமானமற்ற செயல் அநீதியானது, ஏற்றுக்கொள்ள முடியாதது, இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அவர் சுட்டுக்கொல்லப்பட்ட அன்று நான் ஹாடியின் அலுவலகத்திற்குச் சென்றேன். நான் ஒரு தொழிலதிபர்; எனக்கு ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் உள்ளது. நான் முன்பு நிதி அமைச்சகத்தில் பணிபுரிந்தேன். ஒரு வேலை வாய்ப்பு தொடர்பாக ஹாடியைச் சந்திக்கச் சென்றேன். அவர் அந்த வேலையை ஏற்பாடு செய்வதாக உறுதியளித்து, முன்பணம் கேட்டார். அதன்படி, நான் அவருக்கு 500,000 டாக்கா கொடுத்தேன். அவர் தனது பல்வேறு திட்டங்களுக்கு நன்கொடை அளிக்குமாறும் என்னிடம் கேட்டார், அவர் கேட்கும்போதெல்லாம் நான் நிதி வழங்கினேன். கடந்த வெள்ளிக்கிழமை கூட, அவருடைய ஒரு திட்டத்திற்காக நான் அவருக்குப் பணம் கொடுத்தேன்.

ஹாடியின் கொலைக்கு ஜமாஅத் அமைப்பே காரணம். ஜமாஅத்தின் ஒரு உருவாக்கமே அவர். ஜமாஅத் சக்திகளால் அவர் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் ஜமாஅத்தின் வேலை. நானும் என் தம்பியும் அந்த மோட்டார் சைக்கிளில் இல்லை, நாங்கள் வேண்டுமென்றே சிக்கவைக்கப்பட்டுள்ளோம். என் குடும்பம் அநியாயமாகத் துன்பப்படுகிறது. இந்த அளவிலான துன்புறுத்தல் மிகவும் வருத்தமளிக்கிறது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : India ,Dubai ,Usman Hadi ,Faisal Karim Masood ,Bangladesh ,
× RELATED 600 கிலோ எடையுடன் வாழ்ந்த உலகின் மிகக் குண்டு மனிதர் மரணம்