இரும்பு மனிதர் முதல்வர் மு.க.ஸ்டாலின் உலகத்துக்கே வழிகாட்டியாக இருக்கிறார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பெருமிதம்

 

பெரம்பூர்: எங்கள் இரும்பு மனிதர் முதல்வர் மு.க.ஸ்டாலின் உலகத்துக்கே வழிகாட்டியாக உள்ளார் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னை திருவிக.நகர் சட்டமன்ற தொகுதியில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு இன்று காலை ஆய்வு செய்தார். இதன்பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது; திருவிக. நகர் சட்டமன்ற தொகுதியில் இன்றைக்கு 6 இடங்களில் ஆய்வு மேற்கொண்டிருக்கின்றோம். சென்னை பெருநகர வளர்ச்சி குடும்பத்தின் சார்பில் சந்திரயோகி சமாதி தெருவில் கட்டப்பட்டு வருகின்ற திருமண மண்டபத்தை ஜனவரி மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது என்று திட்டமிட்டு உள்ளோம்.

தேர்தல் அறிவிப்புக்கு முன்பு குறைந்தபட்சம் 60 திட்டங்களையாவது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். இவ்வாறு கூறினார். இதன்பின்னர் அமைச்சர் அளித்த பேட்டி; வியாபாரம் ஆக்காமல் கோயில்களில் தர்ம தரிசனம் ஏற்பாடு செய்யவேண்டும் என அர்ஜுன் சம்பத் கூறியுள்ளாரே? அவரை முதலில் எந்த திருக்கோயிலுக்கு போனாலும் சிறப்பு தரிசனம் இல்லாமல் மற்றவர்களைப்போல் வரிசையில் நின்று தரிசனம் செய்ய சொல்லுங்கள். ஊருக்கு மட்டும் உபதேசம் பத்தாது, தனக்கும் அது வேண்டும். முதலில் அவரை பொது தரிசனத்தில் சென்று தரிசனம் செய்ய சொல்லுங்கள். அதன் பிறகு நாங்கள் அந்த முறையை கொண்டு வருகிறோம்.

தமிழர்களை வஞ்சிப்பது ஸ்டாலின்தான் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளாரே? கீழடியை போய் பாருங்கள் தமிழர்கள் தொன்மைக்கு அது ஒரு அடையாளம். சமீபத்தில் தமிழக முதல்வரால் கட்டப்பட்ட பொருநை சென்று பாருங்கள். அதுவும் தமிழர்கள் அடையாளம். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இரும்பை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் அதுவும் தமிழர்கள் அடையாளம். ஒட்டுமொத்த ஒன்றியத்தில் மாத்திரம் அல்ல உலகத்திற்கே வழிகாட்டியாக இருப்பவர் எங்கள் இரும்பு மனிதர் முதல்வர் மு.க.ஸ்டாலின்தான். இவ்வாறு கூறினார்.

மேயர் பிரியா கூறுகையில், ‘’புளியந்தோப்பு பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேல் ஆடுதொட்டி செயல்பாட்டில் உள்ளது. வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் 45 கோடி செலவில் ஆடுதொட்டி கட்டப்பட்டு வருகிறது. ஆடு இறைச்சிக்கு மட்டும் 40 கடைகள், கிட்டத்தட்ட ஒவ்வொரு கடையும் 1400 சதுர அடியில் உள்ளது. 18 கடைகள் மாட்டிறைச்சிக்காக கட்டப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்களுக்கு இறைச்சிக் கழிவுகள் மூலம் பிரச்னை ஏற்படக் கூடாது என்பதற்காக கழிவுகள் சுத்திகரிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது’ என்றார்.
இந்த ஆய்வின்போது தாயகம் கவி எம்எல்ஏ உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: