×

பிறப்பே அறியானை பெற்றவள்

காரைக்கால் அம்மையார் கதை – 5

அந்தரத்தில் கைகள் முளைத்து மாம்பழம் தந்த அதிசயச் செயலை கண்ட பரமதத்தன், வேறெந்த சிந்தனையுமற்று, “ஹாவென்று” உறைந்து போனான். நடந்த ஈசனின் திருவிளையாடல், அவனது மொத்த நினைப்பையும் தாக்கி, முழுக்க முழுக்க தன் சுயமற்று அதிர்ந்துபோய் நின்றான். எந்த அதிசயத்தையும் காணாதவன்போல, எதைக் கண்டும் அதிராதவன்போல, புனிதவதியிடம் தன்னை காட்டிக் கொண்டாலும், அந்த சம்பவத்திற்குப்பின், வாளெடுத்து வீச, சட்டென சாய்ந்த வாழைமரம் போலானான்.

சிலநாட்களில் மெல்ல மெல்ல சுயம்

திரும்பி, இயல்பான சிந்தனைக்கு புத்தி வந்தாலும், நிகழ்ந்த செயலின் பிரம்மாண்டத்தை, மனம் சதா எந்நேரமும் திரும்பத் திரும்ப அவனுக்கு படம் போட்டுக் காட்டியது. எப்போது சமையலறைக்குள் நுழைந்தாலும், உத்தரத்தில் பார்வை நிலைகுத்தியது. மாம்பழத்தை ஏந்திய, வெண்ணீறுபூசிய கைகளை தேடியது. புனிதவதி நிச்சயம் சாதாரண மானுடப் பெண்ணில்லை என பயமுறுத்தியது.

“கோயிலில் கடவுளுண்டா” என கேட்டவனுக்கு, தன்வீடே கோயில்போல தோன்றியது. “இல்லாத கடவுளுக்கு ஏன் அபிஷேகம்” என வினா எழுப்பியவனுக்கு, தன்மனைவியே தெய்வஅம்சமாய் தெரிந்தது. அவன் இரவில் உறக்கம்வராமல் தவித்தான். அப்படி உறங்கினாலும், மணிக்கட்டில் உருத்திராட்சமும், திருநீறு அணிந்த கரமொன்று, கனவில் அவன் தலை
தடவியது.

அந்த இரவுகளில் வாரிச் சுருட்டி எழுந்து கொண்டான். உடம்பெல்லாம் வியர்த்து கொட்ட விழித்தவனுக்கு, எவ்வித கலக்கமுமில்லாமல், அருகில் தெய்வீகப் புன்னகையுடன் உறங்கும் புனிதவதியைக் கண்டு, மெல்லிய பயம் வந்தது. தன் மனைவியை பார்க்கும் போதெல்லாம், அவனுக்கு தானாக கைகள் கூப்பத் தோன்றியது.அடக்கிக் கொண்டான்.

அதைவிட, அன்று நடந்ததைப்பற்றி, பிறரிடம் பேச மிகவும் பயமாயிருந்தது. புனிதவதியை கட்டிய மனைவி எனவும் கொள்ளமுடியாமல், தெய்வத்தைக் காட்டிய தேவதையென வணங்கவும் முடியாமல், பரமதத்தன் இருதலைப் பாம்பாய் தவித்தான்.ஆனால், புனிதவதி இயல்பாய்தானிருந்தாள். அந்த தெய்வீக நிகழ்வைக் குறித்து எவ்விதமும் அலட்டிக் கொள்ளாது, எந்தவித அகந்தையுமில்லாது, ஏதோ வீட்டின் பின்புறத் தோட்டத்து மாமரத்திலிருந்து பழம் பறித்து வந்து, உண்ணத் தந்ததுபோல, சாதாரணமாக இருந்தாள். எப்போதும்போல, தன் இல்லக் கடமைகளையும், கணவனின் மனம் கோணாத வண்ணம், அவனுக்குரிய பணிவிடைகளையும், சிவனடியார்களுக்கான தன் விரதத்தினையும் இடைவிடாமல் தொடர்ந்தாள்.

நீண்ட மனப் போராட்டக் குழப்பத்தில், பரமதத்தன் மெல்ல மெல்ல வீட்டுக்கு வருவதை குறைத்துக் கொண்டான். மதிய உணவை வியாபாரத் தலத்திற்கே அனுப்பச்சொல்லி, புனிதவதியை
சந்திப்பதை, முடிந்தவரை தவிர்த்தான். இரவு அவள் உறங்கியபின் வீட்டிற்கு வந்தான். அறைமாறி உறங்கினான்.தன்கணவனின் செய்கை புனிதவதிக்கு வலித்தது. “ஏனிப்படி செய்கிறீர்கள்” எனக் கேட்டபோது, தன் பாதத்தையே பார்த்தபடி இருப்பவனை, என்னசெய்வதென தெரியவில்லை. சரி, அன்று நடந்த அதிசயத்தை கண்டு மிரண்டு போயிருக்கிறானென சமாதானம் செய்து கொண்டாள். தானாய் அமைதியாகட்டும் என காத்திருந்தாள்.

ஆனால், பரமதத்தன் அமைதியாகவில்லை. மாறாய், அடிமுடிகாணா அண்ணாமலையென, புனிதவதி பிரம்மாண்டமாய், அவனுள் உருவெடுத்திருந்தாள். தன்மனைவி தெய்வாம்சம் பொருந்திய பெண்மணியென தீர்மானித்திருந்தான். “சாதாரண மானுடனான நான், தெய்வப் பெண்ணுடன் எப்படி குடும்பம் நடத்துவது” என தன்னுள் புலம்பினான். நிரந்தரமாக விலகிப்போக முடிவு செய்தான். வீட்டுப் பெரியவர்கள் காரணம் கேட்டால்,நடந்ததை சொல்ல பயமாயிருந்தது.

பேசாமல், யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறலாம் என முடிவு செய்த நேரத்தில், தனதத்தர் தூரதேசத்து வியாபாரம் குறித்து அவனிடம் பேசினார். வாசனை திரவியங்களும், சீனத்துப் பட்டும், தட்டோவியங்களும் இறக்குமதி செய்ய வேண்டுமென்றார்.இதுதான் சமயமென, தனதத்தரின் இல்லத்தில் புனிதவதியை ஒப்படைத்துவிட்டு, பரமதத்தன், தூரதேசம் கிளம்பினான். தூரதேசத்தில் மாமன் தந்திருந்த பொறுப்புகளை விரைவாக முடித்தான்.

பொருட்களை ஏற்றுமதி செய்து காரைவனத்திற்கு அனுப்பிவிட்டு, அவன் மட்டும் ஊர் திரும்பாது, தேசங்கள் பல சுற்றினான். எத்திசை நோக்கி பயணித்தாலும், புனிதவதி இருக்கும் திசையை நோக்கி வணங்கினான். எச்செயலையும் செய்தாலும், புனிதவதி பெயர் சொல்லி செய்தான்.போனதேசத்தில் பொருள் வாங்கி, போகும் தேசத்தில் பொருள் விற்று, பெருஞ் செல்வங்கள் சேகரித்தான். எவரோடு பேரம் பேச அமர்ந்தாலும், “அம்மையே, உடனிரு” என வேண்டிக் கொண்டான்.

படிந்த பேரத்தின் ஒரு பகுதியை, புனிதவதியின் பெயர்சொல்லி வறியவர்க்கு உணவிட்டான். “ஈசனுண்டா” என்ற கேள்வி கொண்டவன், நெற்றி நிறைய நீறணிந்த சிவபக்தனானான்… வியாபாரம் நன்கு சூடு பிடிப்பதால், வர தாமதமாகுமென, பெயருக்கு ஊருக்கு தகவலனுப்பினான். யாரும் தொடர்பு கொள்ள முடியாதபடிக்கு, தேசம் மாறிக் கொண்டேயிருந்தான். ஏனெனில், அப்போதைக்கு ஊர் திரும்பிடும் எண்ணம் அவனுக்கில்லை.

காலம் வேகமாக நகர்ந்தபடி, மெல்ல மெல்ல புனிதவதியை, புனிதவதியாராக மாற்றிக் கொண்டிருந்தது. கற்பொழுக்கம் தவறாத புனிதவதியார், பரமதத்தனை மனதால் தொழுது காத்திருந்தார். “உன் கணவருக்கும் உனக்கும் ஏதேனும்பிணக்கா” சந்தேகத்துடன் கேட்ட உறவுகளிடம், நடந்தவை எதையும் கூறாமல் மௌனம் காத்தார். அதிகம் பேசுவதைத் தவிர்த்து, அமைதியாக சிவ பூஜைகள் செய்து வரலானார்.

அப்படி செய்த பூஜைகள் புனிதவதியாரை மேலும் கனிவாக்கியது. பவுர்ணமி நிலவொளி போன்ற அவர் முகத்தை, மேலும் பிரகாசமாக்கியது. ஒருகட்டத்தில், புனிதவதியாருக்கு, பரமதத்தன் “இன்று வருவான்” என்கிற நம்பிக்கை தகர்ந்து, “என்று வருவான்?” என்கிற கவலை எழுந்தது. அந்தக் கவலையை மறக்க, நீண்டநேரம் சிவபூஜையில் ஆழ்ந்தார். தன் கணவன் விரைவில் வீடு திரும்ப வேண்டுமென, தன் உக்கிரத் தவத்தால் ஈசனை உலுக்கினார். புனிதவதியாரின் உக்கிரத்தவம் தாளாத ஈசன், பரமத்தனை ஊருக்கு மீண்டும் திரும்புகிற எண்ணத்தில் தள்ளினான்.

பல மாதங்களாக ஊர்திரும்ப எண்ணம் கொள்ளாத பரமதத்தனுக்கு, ஏனோ தமிழ்தேசம் திரும்பும் ஆவல் பலமாய் எழுந்தது. தமிழ்தேசம் நோக்கி புறப்பட்டான். ஆனால், சேர்த்த செல்வத்தோடு கிளம்பி, காரைவனம் திரும்பாமல், மதுரையம்பதியில் கால்பதித்தான். அங்கேயே நிரந்தரமாக தங்கி வியாபாரம் செய்தான். அங்குள்ள வணிகப் பெருமானின் உத்தம மகளொருத்தியை, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு, சுகவாழ்வு நடத்தினான். அதன்பலனாய் பிறந்த பெண் குழந்தைக்கு “புனிதவதி” என பெயரிட்டான். இது எவர் பெயரென கேட்ட மனைவிக்கு, “என் குலதெய்வப் பெயர்” என்றான். “இந்தவாழ்வே அந்த தெய்வமிட்ட பிச்சை”யென்றான்.

மனைவியோடும், குழந்தையோடும் பலகாலம் நல்வாழ்வு நடத்திக் கொண்டிருந்த பரமதத்தனை, வியாபாரச் சந்தையில் கண்ட, தனதத்தரின் உறவினர் ஒருவர், உறுத்துப் பார்த்துவிட்டு, “இது பரமதத்தனாயிற்றே” என புருவம் தூக்கினார். விரைவாக காரைவனம் வந்தடைந்து, தனதத்தரைக்கண்டு, மதுரையில் பரமதத்தனை கண்டவிபரம் சொன்னார்.

மருமகன் குறித்த தகவலால் பெரிதும் மகிழ்ந்த தனதத்தர், தன்மனைவி, பரமதத்தனின் பெற்றோர் மற்றும் உறவுகள் புடைசூழ, மகளை அழைத்துக்கொண்டு மதுரை கிளம்பினார். நகருக்குள் நுழையும்முன், எல்லையிலுள்ள சத்திரத்தில் தங்கி, உறவினர்மூலம் தகவல் அனுப்பினார். விடிந்ததும் புனிதவதியோடு இல்லம்வருவதாய்சொல்லியனுப்பினார்.

எல்லோருடனும் புனிதவதி தன்னைக் காண வந்திருப்பதை அறிந்து, முதலில் அதிர்ந்த பரமதத்தன், பின் சமாதானமானான். தானே வந்து பார்ப்பதாக பதில் அனுப்பினான். உறவுகள் குதூகலித்தன. “வந்ததும் உன்னை அழைத்துக்கொண்டு காரைவனம் கிளம்பி விடுவான் பார்” என புனிதவதியாரை கிண்டல் செய்தன. “இல்லையில்லை, இனி கணநேரம் கூட பிரியாது, மதுரையிலேயே தங்க வைத்துக் கொள்வான்” என கேலி செய்தன.

விடிந்ததும், தன் மனைவி, குழந்தையுடன், பரமதத்தன் புனிதவதியார் தங்கியிருந்த சத்திரம் வந்தடைந்தான். பரமதத்தனை கண்ட சந்தோஷத்தில், புனிதவதியார் தலைகுனிந்து கொண்டார். அதனால் உடன்வந்த அவனின் மனைவியையும், குழந்தையையும், புனிதவதியார் காணவில்லை. உடன்வந்த, பரமதத்தனின் மனைவியையும், குழந்தையையும் கண்ட உறவுகள், யாரென புரியாது கிசுகிசுத்தன. “யாரிவர்கள், இங்கு ஏன் வந்திருக்கிறார்கள்” என தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

எவரையும் திரும்பிப் பாராது, எவர் பேச்சையும் காதில் வாங்காது, பரமதத்தன் புனிதவதியார் முன்புபோய் நின்றான். தொடர்ந்த பூஜைகளால், முன்பைவிட பிரகாசித்த புனிதவதியார் முகம் நோக்கினான். “என்அம்மையே” என விம்மினான். தன் மனைவியை அழைத்து, அவளை வலப்பக்கமும், தன் குழந்தையை இடப் பக்கமும் நிற்க வைத்தான். தோள்துண்டை எடுத்து, இடுப்பில் இறுக்கி கட்டிக் கொண்டான்.

வலப்பக்கம் நின்ற தன்மனைவியிடம், “இதோ, நம்மை வாழவைக்கும் குல தெய்வம். விழுந்து வணங்கி, ஆசி பெற்றுக் கொள்” என்றான். “அம்மையே, என்னையும், என் குடும்பத்தையும் ஆசிர்வதிப்பாய்” என தலைக்குமேல் கைகூப்பி, மொத்தக் குடும்பத்தோடு புனிதவதியாரின் காலில் விழுந்து சாஷ்டாங்கமாய் வணங்கினான். நிலம்படிந்த உடம்பதிர, குலுங்கிக் குலுங்கி அழுதான். யாரும் எதிர்பாராத பரமதத்தனின்செய்கைக்கு, மடியில் நெருப்பு விழுந்ததுபோல, அதிர்ந்து மொத்த உறவுகளும் துள்ளியெழுந்தன.

பரமதத்தனின் செய்கைக்கு, புனித வதியார் பதறினார். வேகமாய் நகர்ந்து, தந்தையின் முதுகுப் பக்கம் நின்று கொண்டார். பின்னர், ஓடிப்போய் அருகிலிருந்த அறைக்கதவின் பின்னே, ஒளிந்து கொண்டு எட்டிப் பார்த்தார். தனதத்தர் மிரண்டுபோய் நின்றார். நிதிபதி என்ன நடக்கிறதென புரியாமல் திகைத்தார். உறவுகள் அதிர்ந்தெழுந்தன.“இதென்ன புதுப்பழக்கம், மனைவியின் காலில் கணவன் விழுவது? எந்த தேசத்தில் இப்பழக்கம் கற்றாய்” என கேள்வியெழுப்பின. “யாரிந்தப் பெண்மணி, எவர்குழந்தையிது” என அதட்டின.

பரமதத்தன் தன் இரண்டாவது மனைவியையும், குழந்தையையும், உறவுகளிடம் அறிமுகம் செய்தான்.“அடப்பாவி. புனிதவதிக்கு என்னடா குறை?” என நிதிபதி அவன் தோள்பிடித்து உலுக்கினார். “பாவி, பாவி” என தலையில் அடித்துக் கொண்டார். பரமதத்தன் தன்தந்தையின் கைகளை பிடித்துக் கொண்டான். “புனிதவதி பூரணமானவரப்பா. அவரிடம் ஒரு குறையுமில்லை. நானே குறையானவன். ஆமாம். நானே பாவி.

அவரோடு வாழ்வு நடத்த, துளிகூட தகுதியற்ற மாபாவி். மீண்டும் சொல்கிறேன், புனிதவதி பூரணமானவர். நானே குறையானவன். அவ்வளவு ஏன்?, புனிதவதியாரோடு ஒப்பிடுகையில் நாம் எல்லோருமே குறையானவர்கள். நிறைவின் முன் குறைகள் வணங்குதலே நலம். எனவே, அவரின் காலில் விழுந்து நான் வணங்கியதுபோல, வந்திருக்கும் அனைவரும் அவர்காலில் விழுந்து ஆசி பெற்றுக் கொள்ளுங்கள்” என பணிவுடன் கூறினான்.

உறவுகள் கூச்சலிட்டன. குறிப்பாக பெண்கள் திட்டித் தீர்த்தனர். “பைத்தியம் பிடித்து விட்டதா உனக்கு?, வாலறுபட்ட குரங்கு, தன் இனத்தையே வாலறுக்க சொன்ன கதை போல, உன் முட்டாள்தனத்தை நாங்களும் செய்ய வேண்டுமா” என உதாரணம் சொல்லி ஏசினர்.ஆனால், இத்தனை களேபரத்தையும், அனைவரின் கூச்சலையும், புனிதவதியார் அமைதியாக எந்தவித சலனமுமில்லாமல் நோக்கிக் கொண்டிருந்தார். அவருக்குள் வேகமாக சிவமந்திரம் ஓடிக்கொண்டேயிருந்தது. அத்தனை கூச்சலிலும், பேரமைதியின் லயத்தில் புனிதவதியாரின் மனம் துதித்துக் கொண்டிருந்தது.

புனிதவதியார், எல்லோரின்மீதும் பார்வையை சுழலவிட்டார். அன்னை, தந்தை, மாமன், அத்தை, உறவுகளென அனைவரையும் தன் பார்வையாலேயே அளந்தார். பார்க்கிற எல்லா மனிதர் மீதான உறவுச் சங்கிலிகளும் பட்பட்டென தெறித்து விழுந்தன. அனைவரின் மீதும் பற்றற்றத்தன்மை அவருக்குள் நிரம்பியது. கடைசியாக பரமதத்தன் மீது தன்பார்வையை நிறுத்தினார். பார்த்துக் கொண்டே இருந்தார்.

“நேற்றுவரை இவன் வருகைக்காக பார்த்திருந்தோம். இவனே நம் தெய்வம், இவனுடனே இந்த யௌவனமும், இளமை வாழ்வும் என்று காத்திருந்தோம். ஆனால், காணாதுபோனவன் திடீரென இப்போது வந்து, நான்கடவுள் என்கிறான். பவுர்ணமி நிலவென இந்த அழகை கொண்டாடியவன், என்னை பரமனின் அம்சமென துதி பாடுகிறான். எது தெய்வீகமுகமென இவனை கொஞ்ச வைத்தது?, இப்போது தெய்வீக அம்சமென கூறும்படியாக, எது இவனை மாற்றியது?.

“இதோ, கூச்சலிடுகிற உறவுகள்கூட, இப்படியொரு அழகைப் புறக்கணிக்கிறாயே” என்றுதான் இவனை திட்டித் தீர்க்கின்றன. இதே, பற்கள் துருத்தியும், பஞ்சடைந்த முகமுமாய், நான் இருந்திருந்தால், இவ்விதம் பேசமாட்டார்களோ?

“எது இவனுக்காக நம்மையும் காத்திருக்க வைத்தது?. இந்த இளமையா?, இந்த யௌவனமா?, இது இருப்பதால்தானா இவனைக் குறித்து யோசித்துக் கொண்டிருந்தோம்?. இந்த அழகும், இளமையும் இல்லையெனில் முழுமையாக ஈசனின் நினைப்பிலேயே இருந்திருப்போமோ?” என பலகோணங்களில் யோசித்துக்கொண்டே, அதேநேரத்தில் பரமதத்தன்மீதான தன் பார்வையை நகர்த்தாது, அவனைபார்த்துக்கொண்டேயிருந்தார்.

அப்படி பார்த்துக் கொண்டேயிருக்கும் சமயத்தில், ஏதோவொன்று மிகப்பெரிதாய், அவருள்ளிருந்து கழன்று விழுந்தது. பெரும்பாரமொன்று, தன்னிலிருந்து அகன்றது போலிருந்தது. அனைத்தும் ஈசனின் விருப்பமென பெருமூச்செறிந்துப் புன்னகைத்தார். அந்தப் புன்னகை, தன்வாழ்வுகுறித்து எல்லாமறிந்த புன்னகையாயிருந்தது.தனதத்தருக்கு, தன்மகளின் வெறித்த பார்வை, வேதனையைத் தந்தது. பார்த்துப் பார்த்து மணம் செய்துவித்த மகள், இப்படி ஒற்றை மரமாய் நிற்கிறாளே என கோபம் வந்தது.

கோபமும், அழுகையுமாய், “ஏனய்யா இப்படி அடாது செய்கிறாய், ஒரே மகளய்யா, ஒரே மகள். அவளை ஒதுக்கி வைக்கும்படி அப்படியென்ன குற்றம் அவள் செய்தாள்?, காரணத்தைச் சொல்” என கதறினார்.பரமதத்தன், தனதத்தரை அமைதியாக்கினான். கூச்சலிட்டுக் கொண்டிருந்தஉறவுகளை நோக்கி கைகூப்பி, பேசாதிருக்கும்படி கேட்டுக் கொண்டான். உரத்த குரலில் மாம்பழக்கதை சொன்னான். தான்கேட்டு, புனிதவதி வேண்ட, அந்தரத்தில் கைமுளைத்து, மாம்பழம் தந்த அதிசயத்தையும், அதை தான் கண்ணால் கண்டதையும் சொன்னான்.

(தொடரும்)

குமரன் லோகபிரியா

Tags : Karaikal Ammayar ,Eisen ,
× RELATED அருள்மிகு வலுப்பூரம்மன் கோயில்!