சென்னை: வடக்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. மேலும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக கடலோரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. பிற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இரவு அதிகாலை நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும்.
இதேநிலை நாளையும் நீடிக்கும். மேலும், இன்றும் நாளையும் தமிழகத்தில் குறைந்த பட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் வரையில் குறைவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று இரவு அதிகாலை நேரத்தில் உறைபனி நிலவும். சென்னையில் இன்றும் காலை நேரத்தில் பனி மூட்டம் காணப்படும்.
