×

தலைவர்கள் கமென்ட்

* கார்த்திகை நாளில் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது உலகம் முழுவதிலும் இருக்கின்ற முருக பக்தர்களுடைய எண்ணமாக, கோரிக்கையாக இருக்கிறது. இதனையே பூர்ணசந்திரன் இப்படி வெளிப்படுத்தியிருக்கிறார். தீக்குளிப்பு என்பதை யாரும் செய்யக்கூடாது. உயிரோடு இருந்துதான் போராட வேண்டும். – எல்.முருகன், ஒன்றிய இணை அமைச்சர்

* தமிழகத்தில் வணிக நிறுவனங்களில் தமிழ் மொழியில் பெயர் பலகை வைக்க தொடர்ந்து வலியுறுத்தி, தொழிலாளர் நலத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழில் பெயர் பலகை இல்லாவிட்டால் அதற்கான அபராத தொகையை அதிகரித்துள்ளோம். – அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

* அம்பேத்கர் என்ற பெயரால் நாடு முழுவதும் 30 கோடிக்கு மேலான மக்கள் ஓரணியில் திரளுகின்றனர் என்பதுதான் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளுக்கு அச்சமாக உள்ளது. அம்பேத்கர் இயற்றிய அரசியல் அமைப்புச் சட்டம், அவர்களுக்கு எதிராக இருக்கிறது என்பதுதான் பிரச்னை. அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை செயல்பட விடாமல் தடுத்து அதை நீர்த்துப்போக செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களின் முக்கிய நோக்கம். அரசாங்கத்துக்கு மதம் இருக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்தியவர் அம்பேத்கர். பாஜ இன்னொரு முறை ஆட்சிக்கு வந்தால், அம்பேத்கர் எழுதிய சட்டம் செல்லாது என்று தூக்கிப் போடுவார்கள். மனுஸ்மிருதி தான் இந்த நாட்டின் சட்டம் என்று சொல்வதற்கு தயங்க மாட்டார்கள். – திருமாவளவன், விசிக

* போதைப் பொருள் அதிகரிப்பதாக ஒன்றிய அமைச்சர் குற்றம் சாட்டுகிறார். பிஜேபி ஆளுகிற மாநிலங்களில் இருந்து தான் போதைப் பொருள் பல்வேறு இடங்களுக்கு செல்கிறது. அதை அவர்கள் தான் தடுக்க வேண்டும். மகாத்மா காந்தி பெயரில் செயல்படுத்தப்பட்டு வந்த 100 நாள் வேலை திட்டத்தை மாற்றி இருப்பது வெறுப்பு அரசியல் தான். பிஜேபி ஒன்றிய அரசு அனைத்திலும் தோற்றுப்போய்விட்டது. அதை மறைக்கவே மடைமாற்று அரசியலை செய்து வருகிறது. தமிழ்நாடு நல்லிணக்க நாடு. அதை ஒருபோதும் சீர்குலைக்க முடியாது. – வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட்

* ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் நிரந்தர தீர்வு வரவேண்டும். மீனவர்கள் அச்சமின்றி கடலுக்குள் செல்ல வேண்டும். அப்போதுதான் அவர்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய முடியும் என பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து பேசி முடிவு கண்டெடுக்க வேண்டும். இலங்கை அரசுக்கு நம்முடைய இந்திய வெளியுறவுத்துறை மூலம் அழுத்தம் கொடுக்க வேண்டும். – ஜி.கே.வாசன், தமாகா

Tags : Thiruparangundram ,Kartika Day ,Muruga ,Purna Chandra ,L. Murugan ,
× RELATED சொல்லிட்டாங்க…