×

செக் மோசடி வழக்கு மதிமுக எம்எல்ஏவுக்கு 2 ஆண்டுகள் சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: காசோலை மோசடி வழக்கில் மதிமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமாருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ள மருத்துவர் சதன் திருமலை குமார். மதிமுகவை சேர்ந்த இவர், கடந்த 2016ம் ஆண்டு தன்னுடைய தொழில் முன்னேற்றத்திற்கு சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த நியூ லிங் ஓவர்சீஸ் நிதி நிறுவனத்தில் 1 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதற்காக ரூ.50 லட்சம் தொகை கொண்ட இரண்டு காசோலையை சதன் திருமலை குமார் வழங்கியுள்ளார். கடன் தொகைக்கு வழங்கிய காசோலை வங்கியில் செலுத்திய போது சதன் திருமலை குமார் வங்கி கணக்கில் பணம் இல்லை என்று திரும்பியது.

இதையடுத்து, கடந்த 2019ம் ஆண்டு சதன் திருமலை குமாருக்கு எதிராக நியூ லிங் ஓவர்சீஸ் நிதி நிறுவனத்தின் இயக்குநர் எழும்பூர் நீதிமன்றத்தில் காசோலை மோடி வழக்கு தொடர்ந்தார். சட்டமன்ற உறுப்பினர் என்பதால் இந்த வழக்கு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் சிறப்பு நீதிமன்ற உத்தரவின்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி சுந்தரபாண்டியன், காசோலை மோசடி வழக்கில் சதன் திருமலைகுமாருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், 1 கோடி ரூபாய் பணத்தை இரண்டு மாதங்களுக்குள் அவர் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். தண்டனை பெற்ற சதன் திருமலைக்குமார் மேல் முறையீடு செய்வதற்காக இரண்டு மாதங்கள் கால அவகாசம் வழங்குவதாகவும், அதுவரை தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : MDMK MLA ,Chennai ,Dr. ,Sadhan Thirumalai Kumar ,Vasudevanallur ,assembly ,Tenkasi district ,
× RELATED தைலாபுரம் இல்லம் முன்பு பரபரப்பு...