சென்னை: திருவள்ளூரில் நடைபெற்ற பிரச்சாரத்தின்போது, அதிமுக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு தீபாவளிக்கும் பொதுமக்களுக்கு பட்டு வேஷ்டி, பட்டு சேலை வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். திருவள்ளூரில் `மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயண பிரச்சாரம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், ‘‘210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதிமுக ஆட்சி வந்த உடன் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். மீண்டும் அதிமுக அரசு அமைந்த உடன் ஒவ்வொரு தீபாவளிக்கும் பொதுமக்களுக்க பட்டு வேஷ்டி, பட்டு சேலை வழங்கப்படும். நெசவாளர்களுக்கு தரமான வீடு கட்டி கொடுக்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு, பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் அரசு தர வேண்டும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 100 நாள் வேலைத்திட்டத்தை 125 நாட்களிலிருந்து உயர்த்தி 150 நாட்களாக உயர்த்தப்படும்’’ என்றார்.
