தாம்பரம், டிச.31: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பைக் ரேஸில் ஈடுபடுவோரை கண்காணிக்க 5 வாகன தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சாலை பாதுகாப்பு வரையறைகள் கடுமையாக பின்பற்றப்படும், என்றும் தாம்பரம் மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தாம்பரம் மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை பொதுமக்கள் பாதுகாப்பாகவும், விபத்தில்லாமலும் கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் பாதுகாப்பு நலன்கருதி இன்று இரவு முதல் நாளை (1ம் தேதி) வரை புறநகர் பகுதிகளில் 2500 போலீசார் மற்றும் 260 ஊர்க்காவல் படையினர் உள்ளடக்கிய விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை தாம்பரம் மாநகர காவல்துறை செய்துள்ளது.
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட முக்கிய இடங்களான தாம்பரம் பேருந்து நிலையம், ரயில் நிலையம், கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையம் மற்றும் ஓஎம்ஆர், இசிஆர், ரேடியல் சாலை, ஓஆர்ஆர் மற்றும் ஜிஎஸ்டி சாலை போன்ற முக்கிய சாலைகளில் வாகன நெரிசல்களை தவிர்க்க 36 சாலை பாதுகாப்பு குழுக்களும், 60 வாகனச் சோதனை குழுக்களும் மற்றும் அதிவேகமாக செல்லும் வாகனங்களையும், பைக் சாகசங்கள், ரேசில் ஈடுபடுபவர்களையும் தடுத்து கண்காணிக்க 5 வாகன தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பனையூர், கோவளம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில், காவல் துறையினர் தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைத்தும் முக்கிய இடங்களில் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்தும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மேலும் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு காவல்துறை, கடலோர பாதுகாப்பு போலீசாருடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கும், தடை விதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
