×

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு: ‘கோவிந்தா கோவிந்தா’ என பக்தர்கள் பரவசம்

சென்னை, டிச.31: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னையில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ‘கோவிந்தா கோவிந்தா’ என பக்தர்கள் பரவசம் அடைந்தனர். தமிழகத்தில் உள்ள அனைத்து வைணவ கோயில்களிலும் நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடந்தது. அந்த வகையில் சென்னையில் பிரசித்தி பெற்ற தி.நகர்  பாலாஜி கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோயில், மாதவ பெருமாள், அயனாவரம் கரியமாணிக்க பெருமாள் கோயில், சூளை சீனிவாச பெருமாள் கோயில், சென்னகேசவ பெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் நேற்று அதிகாலையில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் காட்சி அளிக்கும் போது கூடியிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என முழக்கமிட்டு பரவச நிலையை அடைந்தனர். குறிப்பாக, 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அதிகாலை 2.30 மணி முதல் 4.30 மணி வரை சொர்க்கவாசல் திறப்பதை பார்க்க கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இரவு முழுவதும் கண் விழித்து காத்திருந்து 4.30 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சியை பக்தர்கள் கண்டுகளித்தனர். சொர்க்கவாசல் திறப்பையொட்டி கோயில் மூலவர் மற்றும் உற்சவருக்கு ஆபரணங்களுடன் சிறப்பு அலங்காரத்துடன் பரமபத வாசல் வழியாக பார்த்தசாரதி பெருமாள், பூதேவி, தேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

முதற்கட்டமாக உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் காலை 6 மணி முதல் பொது தரிசனம் தொடங்கியது. கோயில் கிழக்கு கோபுர வாசல் (முன்புறம்) வழியாக காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மற்றும் மேற்கு கோபுர வாசல் வழியாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பொது தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு பின்கோபுர வாசல் சென்று தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கூடுதல் சிறப்பு ஏற்படுகள் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் அதிகளவில் குவிந்து வரும் நிலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க மருத்துவ முகாம்கள், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் என தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

கோயிலை சுற்றிலும் தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன. கோயில் வளாகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொது தரிசனம் முடிந்த பிறகு உற்சவர் மற்றும் நம்மாழ்வாருடன் பெரிய மாட வீதி புறப்பாடு மேற்கொண்டார். அனைத்தும் முடிந்து இறுதியாக உற்சவர் மூலஸ்தானம் சேர்ந்தார். இதனை தொடர்ந்து இன்று முதல் ஜனவரி 7ம் தேதி வரை 8 நாட்களுக்கு தினசரி மாலை 4.15 மணிக்கு பக்தர்களின் தரிசனத்திற்காக சொர்க்கவாசல் தரிசனம் நடைபெற உள்ளது. இதேபோல தி.நகர் வெங்கட நாராயண சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் கோயில் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளும் நேரங்களில் தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு, குங்குமம், கற்கண்டு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

 பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வைகுண்ட வாசல் வழியாக சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் காத்திருந்து அதிகாலையில் சொர்க்கவாசல் வழியாக சென்று பெருமாளை தரிசனம் செய்தனர். இதையடுத்து வரதராஜ பெருமாள் திருவீதி உலா நடந்தது.

 குமணன்சாவடியில் உள்ள  சித்தி புத்தி உடனுறை  ஞான சுந்தர விநாயகர் கோயிலில் தனி சந்நிதியில் வீற்றிருக்கும் தேவி, பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் சந்நிதியில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு அதிகாலையில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் காத்திருந்து சொர்க்கவாசல் வழியாக சென்று சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல், சிங்கபெருமாள் கோயிலில் உள்ள 1,500 ஆண்டு பழமையான பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோயில், பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில், மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் பெருமாள் கோயில் உள்ளிட்ட புகழ்பெற்ற பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags : Perumal ,Vaikunda Ekadasi ,Chennai ,Paradise Gate ,Perumal Temples ,Govinda ,Vainava ,Tamil Nadu ,
× RELATED ராயபுரம் மண்டலத்தில் ரூ.1.26 கோடி...