திருவாடானை அருகே சாலை அமைக்க கலெக்டரிடம் மனு

ராமநாதபுரம்,டிச.31: திருவாடனை அருகே சாலை அமைக்கக் கோரி கிராமமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், திருவாடனை அருகே உள்ள கீழ அரும்பூர் கிராமமக்கள் தார்ச்சாலை அமைக்கக் கோரி கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து கீழ அரும்பூர் கிராமத்தினர் கூறும்போது, திருவாடானை ஒன்றியம், அரும்பூர் பஞ்சாயத்து கீழ அரும்பூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு திருவாடனையில் இருந்து குளத்தூர் வழியாக கீழஅரும்பூர், ஆதிதிராவி்டர் குடியிருப்பு வரை அரசு டவுன் பஸ் ஒன்று இயக்கப்படுகிறது. ஆனால் இந்த வழித்தடத்தில் சாலை அமைத்து 23 ஆண்டுகள் கடந்து விட்டதால் சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும்,குழியுமாக கிடக்கிறது. மழை காலத்தில் சேதமடைந்த சாலையால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்படும் நிலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் டூவீலர் விபத்து அடிக்கடி நடந்து வருகிறது. எனவே புதிய தார்ச்சாலை அமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: