புதுடெல்லி: கரூர் விபத்து தொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் டெல்லியில் விசாரணை நடக்கும் நிலையில், அடுத்தகட்டமாக விஜய்யை ஜனவரியில் நேரில் விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயர சம்பவம் தொடர்பாகத் தமிழக காவல்துறை விசாரித்து வந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையைத் தொடங்கிய சிபிஐ அதிகாரிகள், விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு நவீன தொழில்நுட்பங்கள் மூலம் முக்கிய தடயங்களைச் சேகரித்தனர். இதனைத் தொடர்ந்து, விசாரணைக்காக ஆஜராகுமாறு தவெக நிர்வாகிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இவ்வழக்கு விசாரணைக்காக தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், எஸ்பி ஜோஸ் தங்கையா உள்ளிட்ட அதிகாரிகள் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர். சிபிஐ எஸ்பி சுனில்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது நிர்வாகிகளிடம், ‘குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் தாமதம் செய்தது ஏன்? அதனால் தான் கூட்டம் கூடியதா? தாமதம் குறித்து முன்கூட்டியே தெரிவிக்காதது ஏன்?’ எனக் கேள்விகள் கேட்கப்பட்டன. மேலும், கூட்டத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதி நேரம் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் (டிசம்பர் 30ம் தேதி) தவெக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ‘கரூர் பிரசார கூட்டத்திற்குத் தலைவர் விஜய் ஏன் காலதாமதமாக வந்தார்? அந்தத் தாமதத்தால்தான் 41 பேர் உயிரிழக்க நேரிட்டதா? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை?’ என்ற கோணத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் உயர் அதிகாரிகளும் இன்று மீண்டும் விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர். தவெக கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் உள்ள நிலையில், அடுத்தகட்டமாக கட்சியின் தலைவர் விஜய்யை நேரில் அழைத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்கு இன்னும் ஓரிரு நாட்களில் முறைப்படி சம்மன் அனுப்பப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிர்வாகிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் விஜய்யிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
