நாக்பூர்: மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியின் நாக்பூர் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். மகாராஷ்டிராவில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்த மகாயுதி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு நடைபெறவுள்ள மாநகராட்சித் தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையைச் சமாளிக்க, ஏற்கனவே பதவியில் இருப்பவர்களுக்குப் பதிலாகப் புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்க பாஜக தலைமை முடிவு செய்தது.
இதனால் கிளர்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்க வேட்பாளர் பட்டியலை முன்கூட்டியே வெளியிடாமல் ரகசியமாக வைத்திருந்த தலைமை, வேட்புமனு தாக்கல் தொடங்கும் நேரத்தில் மட்டுமே பட்டியலை தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பியது. இந்நிலையில் வர்ஷா தாக்கரே, சஞ்சய் பங்களா மற்றும் சேத்தனா டேங்க் உள்ளிட்ட பல மூத்த நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்களுக்கு சீட் மறுக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர்களின் ஆதரவாளர்கள் நேற்று நாக்பூரில் உள்ள ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி வீட்டின் முன்பு திரண்டு ‘எங்களுக்கு நீதி வேண்டும்’ என முழக்கமிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரின் செல்வாக்கு மிகுந்த பகுதியிலேயே பாஜகவினர் வீதியில் இறங்கிப் போராடியது பரபரப்பை ஏற்படுத்தியது. வேட்புமனு தாக்கல் செய்யக் குறைந்த கால அவகாசமே இருப்பதால் அதிருப்தியைச் சமாளித்து விடலாம் என கட்சித் தலைமை கருதினாலும், இந்த விவகாரம் பெரும் கலகமாக மாறக்கூடும் என்ற அச்சம் கட்சியினரிடையே நிலவுகிறது.
