திருமலை: ஆங்கில புத்தாண்டையொட்டி நள்ளிரவு 12 மணி வரை மது விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளதாக ஆந்திர மாநில கலால் துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் 2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாடும் விதமாக மது விற்பனை மற்றும் சேவை நேரத்தை நீட்டிக்க கலால் துறை முதன்மை செயலாளர் அனுமதி வழங்கியுள்ளார். இது தொடர்பாக கலால் மற்றும் மதுவிலக்கு இயக்குநரால் வெளியிடப்பட்ட அறிக்கை:
ஆந்திர மாநிலத்தில் புத்தாண்டிற்கு சிறப்பு அனுமதியின்படி நாளையும் நாளை மறுநாளும் ஏ4 மதுபான கடைகள் நள்ளிரவு 12 மணி வரை விற்பனை செய்யலாம். 2பி பார்கள், சி.1 (இன்-ஹவுஸ்), இ.பி.1 (நிகழ்வு அனுமதி), ஐ.பி.1 (இன்-ஹவுஸ்) உரிமங்களை கொண்ட ஆந்திர சுற்றுலா மேம்பாட்டு கழக நிறுவனங்கள் அதிகாலை 1 மணி வரை மதுபானங்களை விற்பனை செய்து கொள்ளலாம்.
கடந்த ஆண்டு புத்தாண்டு அன்று செயல்படுத்தப்பட்ட அதே கொள்கையையே அரசு தொடரும். இருப்பினும், வரி செலுத்தப்படாத மதுபானங்கள் மற்றும் சட்டவிரோத மதுபானங்களை விற்பனை செய்வதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
