நன்றி குங்குமம் தோழி
மழைக்காலம் முடிந்து குளிர்காலத்திற்கு வந்துவிட்டோம். கூடவே காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களும் வர ஆரம்பித்துவிடும். குளிர்காலத்தில் வரும் இந்த நோய்களை விரட்ட வேண்டும். நமது உடலை நோய் எதிர்ப்பு சக்தியுடனும் அதே நேரத்தில் இதமாகவும் வைத்திருக்க வேண்டும். அதற்கான உணவுகளை பற்றி பார்க்கலாம்.
நாட்டுச் சர்க்கரை
உணவுக்குப் பின் இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால் நாட்டு வெல்லத்தை ஒரு சிறிய அளவு சாப்பிடலாம். இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை அது நிறைவு செய்துவிடும். மேலும், வெல்லத்தைத் தூளாக்கி அதில் ஒரு தேக்கரண்டி நெய்யையும் சேர்த்து கலந்து உண்டு வந்தால், உடலை இதமாக வைத்திருப்பதோடு, குளிர்காலத்தில் வரும் நோய்களையும் விரட்டிவிடும்.
மக்காச்சோள ரொட்டி
மக்காச்சோள மாவில் தயாரிக்கப்படும் இந்த மக்கி ரொட்டியோடு கீரையையும் கடுகையும் சேர்த்து உண்டால், அது குளிர் காலத்திற்கு நல்ல பலனைத் தரும். கோதுமை சப்பாத்திக்கு நல்லதொரு மாற்றாக இருக்கும். தோல், முடி மற்றும் மூளை ஆகியவற்றிற்கு நற்பலன்களைத் தரும். அதோடு தைராய்டு சுரப்பியின் இயக்கத்தையும் இந்த மக்கி ரொட்டி அதிகரிக்கிறது.
கம்பு மாவு
குளிர்காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய இன்னொரு முக்கிய உணவு கம்பு. கம்பு மாவில் சப்பாத்தி சமைத்து சாப்பிடலாம். கம்பில் பொட்டாசியம் இருப்பதால் இது ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டம் மிக எளிதாக நடைபெற உதவுகிறது. ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இந்த கம்பு உணவு நல்ல பலனைத் தருகிறது.
எள்ளு விதைகள்
குளிர்காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய இன்னுமொரு முக்கிய உணவு எள். தலைமுடி வளர்வதற்கு இந்த எள்ளு விதைகள் முக்கிய பங்காற்றுகின்றன. வீட்டிலேயே எள்ளோடு நாட்டு வெல்லத்தைச் சேர்த்து உருண்டைகள் செய்து சாப்பிடலாம். அது உடலை இதமாக வைத்திருக்கும்.
நெய்
நெய்யில் உடலுக்குத் தேவையான ஏராளமான நன்மைகள் உள்ளன. நெய் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பை மட்டுமில்லாமல் முழு உடலையும் வலுப்படுத்துகிறது.
தொகுப்பு: பொ.பாலாஜிகணேஷ், சிதம்பரம்.
