×

15 நாட்களுக்கு மேலாக நீடிக்கும் உறைபனியால் கருகும் தேயிலைச்செடிகள்

* மகசூல் பாதிப்பு

* விவசாயிகள் கவலை

ஊட்டி : நீலகிரியில் தொடர்ந்து 15 நாட்களுக்கு மேலாக உறைபனி நீடிக்கும் நிலையில் தேயிலை மகசூல் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் நீலகிரி மாவட்டத்தில் பனிpபொழிவு விழத்துவங்கும். துவக்கத்தில் நீர் பனி விழும். அதன் பின் படிப்படியாக உறைபனி விழும். உறைபனி தொடர்ந்து நீடிக்காது. ஒரு சில தினங்கள் மிக அதிகமாக காணப்படும். சில சமயங்களில் குறைந்து காணப்படும்.

ஆனால், டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை மூன்று மாதங்கள் தொடர்ந்து உறைபனி பொழிவு காணப்படும். இந்த, சமயங்களில் தேயிலைச் செடிகள் கருகிவிடும். பனிப்பொழிவு சமயங்களில் தேயிலைச்செடிகள் துளிர்க்காமல் கருகி போய்விடும்.

ஊட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் இதுபோன்று பனிப்பொழிவின் காரணமாக தேயிலை செடிகள் அதிகளவில் பாதிக்கும். குறிப்பாக, நீர் நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள் அதிகம் பாதிக்கும்.

ஆனால், இம்முறை வரலாறு காணாத அளவிற்கு பனிப்பொழிவு காணப்படுகிறது. கடந்த 15 நாட்களுக்கு மேலாக நீலகிரி மாவட்டத்தில் உறைபனி பொழிவு அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா போன்ற பகுதிகளில் பனி பொழிவு மிக அதிகமாக காணப்படுகிறது.

தினமும் அதிகாலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியசாவும், சில சமயங்காளில் மைனஸ் 1 முதல் 2 டிகிரி செல்சியசாகவும் பதிவாகி வருகிறது. அதிபட்ச வெப்பநிலை தற்போது 15 டிகிரி வரையே காணப்படுகிறது. உறைபனி பொழிவு அதிகரித்துள்ளதால் தேயிலைச் செடிகள் பாதிக்க துவங்கியுள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள் இந்த பனிப்பொழிவிற்கு பாதிப்பிற்குள்ளாகி உள்ளது. கடந்த பத்து நாட்களாக பெரும்பாலான பகுதிகளில் உள்ள தேயிலை செடிகள் கருகி வரும் நிலையில், தேயிலை மகசூல் நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வருகிறது.

தேயிலை தோட்டங்கள் கருகி வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு குறு தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. துவக்கத்திலேயே பனிப்பொழிவு அதிகம் உள்ளதால் பகல் நேரங்களில் வெயில் அதிகமாக உள்ளதால், அடுத்த மூன்று மாதங்களுக்கு தேயிலை மகசூல் படிப்படியாக குறைந்து விடும்.

தேயிலை மகசூல் குறைந்தால், தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தி நேரமும் குறைக்கப்படும். இதனால், விவசாயிகள் மட்டுமின்றி தொழிலாளர்களும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்று பனிப்பொழிவு காணப்பட்டால் தேயிலைச்செடிகள் மீண்டும் துளிர்க்க சில மாதங்கள் ஆகும் என்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Tags : Nilgiris ,
× RELATED சாயர்புரம் சுற்றுவட்டார கிராமங்களில் மஞ்சள் குலை விளைச்சல் அமோகம்