*விவசாயிகள் வேதனை
தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை அருகே, வயலில் குவித்து வைத்திருந்த 2 ஏக்கர் ராகி பயிர்களை யானை கூட்டம் சேதப்படுத்தி விட்டு சென்றதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே ஊடேதுர்கம், பேவநத்தம் வனப்பகுதியில் வட்டவடிவு பாறை பகுதியில் 40 யானைகள் முகாமிட்டுள்ளன. அதே போல், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் நொகனூர், அரசஜ்ஜூர், அய்யூர் பகுதியில் 30 யானைகள் முகாமிட்டுள்ளன.
இது தவிர, தளி, ஜவளகிரி, தேவர்பெட்டா, கும்மளாபுரம் வனப்பகுதியில் 40 யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் பல பிரிவுகளாக பிரிந்து, இரவு நேரங்களில் ராகி, நெல், அவரை, துவரை, தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இதனிடையே, பேவந்தம் வனப்பகுதியில் முகாமிட்டு இருந்த 40 யானைகளை, தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி வனத்துறையினர் இரு தினங்களுக்கு முன்பு மலசோனை, சிவனப்பள்ளி, சூளகுண்டா, ஜவளகிரி, சென்னமாளம் காட்டுப்பகுதி வழியாக, கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.
தற்போது தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 30 யானைகள், சாணமாவு வனப்பகுதியில் 20 யானைகள் முகாமிட்டுள்ளன. அடுத்த கட்டமாக இந்த 50 யானைகளையும் ஒன்றிணைத்து விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, குந்துக்கோட்டை கிராமம் அருகே செல்வம் என்பவரின் 2 ஏக்கர் நிலத்தில் அறுவடை செய்து வைத்திருந்த ராகி போரை, யானைகள் கூட்டம் சாப்பிட்டு சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளன.
மேலும், துவரை, அவரை, முட்டைகோஸ், தக்காளி செடிகளை சேதப்படுத்தியுள்ளன. இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள், கூட்டமாக கிராமப்புறங்களில் சுற்றி வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
எனவே, வனத்துறையினர் கூடுதலாக பணியாளர்களை நியமித்து, இரவு நேரத்தில் வனத்தை விட்டு வரும் யானைகளை விரட்ட வேண்டும். யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
