*நோட்டீஸ் வழங்க நடவடிக்கை
கடலூர் : கடலூர் மாநகராட்சி பகுதி 45 வார்டு பகுதிகளை கொண்டது. புறநகர் பகுதிகளாக கூத்தப்பாக்கம், பாதிரிகுப்பம், வண்டிபாளையம், திருவந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் அமைந்துள்ளன.
பருவமழையின்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கு சம்பந்தப்பட்ட பகுதிகளில் இருந்து திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையம், மார்க்கெட் காலனி, சூரப்ப நாயக்கன் சாவடி உள்ளிட்ட பகுதிகளை கடந்து கடலூர்- சிதம்பரம் சாலை வழியாக கெடிலம் ஆற்றில் கலக்கிறது.
இந்நிலையில் பருவ மழை காலத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கில் வடிகால் வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பின் காரணமாக மழைநீர் ஆற்றில் கலப்பது தடை ஏற்பட்டு கடலூர் பகுதி வெள்ளத்தில் தத்தளிப்பது தொடர்கதை ஆகிறது.
இதில் பிரதானமாக கடலூர்- சிதம்பரம் சாலை பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள சூரப்பநாயகன் சாவடி உள்ளிட்ட இடங்களில் வடிகால் வாய்க்கால்கள் முற்றிலுமாக ஆக்கிரமிப்பின் காரணமாக மாயமாகியுள்ளது என புகார்கள் எழுந்தது.
ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு மாயமான வடிகால் வாய்க்கால்களை கண்டுபிடித்து மழை வெள்ள காலங்களில் தடையில்லாமல் வெள்ள நீர் ஆற்றில் கலப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மாநகர மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சமூக ஆர்வலர்கள் மற்றும் மழை வெள்ளத்தால் தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் வழக்கறிஞர் ஆல்பர்ட் வினோத் உள்ளிட்டவர்கள் தரப்பிலும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
தொடர் புகாரைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் கடலூர் கோட்டாட்சியர் சுந்தர்ராஜன் தலைமையில், கடலூர் தாசில்தார் மகேஷ், மாநகராட்சி உதவி ஆணையாளர் சதீஷ், செயற்பொறியாளர்கள் சுனிதா, பிரேமசுதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் தங்களிடம் உள்ள அரசு ஆவணங்களை வைத்து அந்த பகுதிகளில் அளவீடு செய்யும் பணிகளை மேற்கொண்டனர்.
முதற்கட்டமாக சம்பந்தப்பட்ட வரைபடத்தில் உள்ளதுபோல் ஏற்கனவே வடிகால் வாய்க்கால் இருந்துள்ளதும், தற்பொழுது வணிக நிறுவனத்தின் பயன்பாட்டில் சம்பந்தப்பட்ட பகுதி உள்ளதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து உரிய ஆய்வுப் பணிகள் துரிதமாக மேற்கொண்டு வடிகால் வாய்க்கால் மற்றும் அதே பகுதியில் இருந்த குளம் ஒன்றும் மாயமாகியது தொடர்பாக ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்ட தரப்பினரிடம் நோட்டீஸ் வழங்கி உரிய நடவடிக்கைக்கு அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாக தரப்பினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே ஆக்கிரமிப்புகள் தொடர்பான ஆய்வு குறித்து தகவல் அறிந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் தரப்பினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பாதிரிப்புலியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பை அகற்றி மழை நீர் வடிகால் வாய்க்காலை சீர் செய்து தர வேண்டும், இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் தரப்பினர் தெரிவித்தனர்.
