சாயர்புரம் சுற்றுவட்டார கிராமங்களில் மஞ்சள் குலை விளைச்சல் அமோகம்

*உரிய விலை கிடைக்குமா?

*விவசாயிகள் எதிர்பார்ப்பு

ஏரல் : சாயர்புரம் சுற்றுவட்டார கிராமங்களில் மஞ்சள் குலை விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள், உரிய விலை கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். தமிழர்களின் முதன்மையான பண்டிகையான தைப் பொங்கல் திருவிழா, ஜனவரி 15ம் தேதி வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையில் கரும்பும், மஞ்சள் குலையும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

குறிப்பாக பொங்கலிடும் போது மஞ்சள் குலையை பானையில் கட்டுவதும், சிலர் பூஜை அறையில் வைத்து வணங்குவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் பொங்கலுக்கு சில தினங்களுக்கு முன்னரே பொருட்களை வாங்கும் போது முதலில் மஞ்சள் குலையை வாங்கிக் கொண்டு தான் மற்ற பொருட்களை வாங்குவது பாரம்பரியமாக இருந்து வருகிறது.

பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகேயுள்ள சிவத்தையாபுரம், சக்கம்மாள்புரம், சேர்வைக்காரன்மடம் மற்றும் அதனை சுற்றுவட்டார கிராமங்களில் மஞ்சள் குலை சாகுபடி விவசாயம் செய்து வருகின்றனர்.

இதேபோல் நடப்பாண்டிலும் மஞ்சள் குலை சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இதனால் சாயர்புரத்தில் இருந்து சிவத்தையாபுரம், சேர்வைக்காரன்மடம் வரையுள்ள மெயின் ரோட்டில் எங்கு பார்த்தாலும் மஞ்சள் குலைகள் வளர்ந்து பசுமையாக காட்சி அளிக்கின்றன.

இப்பகுதியில் விளையும் மஞ்சள் குலைகள் தரத்தில் சிறந்து விளங்குவதால் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி திருநெல்வேலி, மதுரை, சென்னை உள்பட பிற மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதுதவிர மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட தமிழர்கள் அதிகளவு வசிக்கும் பிற மாநிலங்களில் கடை வைத்துள்ள இப்பகுதி வியாபாரிகளும் ஒரு வாரத்திற்கு முன்பே இங்கு வந்து மஞ்சள் குலையை மொத்தமாக வாங்கி விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர்.

இதற்காக ஜனவரி மாதம் பிறந்ததும் இங்கு வரும் வியாபாரிகள் மஞ்சள் குலையை தோட்டத்தில் பார்வையிட்டு அதன் தரத்திற்கேற்ப விலையை விவசாயிகளிடம் நிர்ணயம் செய்து முன்பணம் கொடுத்து செல்கின்றனர். அதன்பின் பொங்கலுக்கு சில தினங்களுக்கு முன்னர் வந்து மஞ்சள் குலையை அறுவடை செய்து லோடு வேன்களில் ஏற்றி அவர்கள் விற்பனை செய்கின்ற இடங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.

நடப்பாண்டில் மஞ்சள் குலைகள் அமோகமாக விளைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் அதிகரித்துள்ள உற்பத்தி செலவுக்கு ஏற்ப மஞ்சள் குலைக்கு உரிய விலை கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதையடுத்து வியாபாரிகளின் வருகையை விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

*‘‘மானிய விலையில் உரம், மருந்து வழங்க வேண்டும்”

சக்கம்மாள்புரம் விவசாயி பெரியநாடார் (70) கூறுகையில், இப்பகுதியில் மஞ்சள் குலை விவசாயத்தை தலைமுறை தலைமுறையாக செய்து வருகிறோம். முன்பெல்லாம் ஏக்கர் கணக்கில் மேற்கொள்ளப்பட்ட மஞ்சள் குலை விவசாயம் தற்போது சென்ட் கணக்கில் குறைந்துள்ளது. பெரும்பாலான விவசாயிகள் 5 சென்ட், 10 சென்ட் என விவசாயத்தை குறைத்து கொண்டனர். இப்பகுதி செம்மண் நிலப்பரப்பு என்பதால் மஞ்சள் செழித்து வளருகிறது. மஞ்சள் விவசாயம் செய்வதற்கு முதன் முதலில் நிலத்தை நன்கு உழுது, அதில் தொழு உரமிட்டு நிலத்தை தயார் செய்து வைத்து கொள்வோம்.

அதன்பின் நெல்லை மாவட்டம் செவல் கிராமம் அல்லது ஈரோடு சென்று மஞ்சள் கிழங்கு விதையை ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.60 வரை வாங்கி வந்து ஊன்றி விடுகிறோம். முதலில் 20 நாட்களுக்கு தினமும், அதன்பின் ஒருநாள் விட்டு ஒருநாள் என்ற முறையில் தண்ணீர் பாய்ச்சுகிறோம்.

30வது நாளில் இருந்து களை எடுப்பது, நோய் தாக்காமல் இருப்பதற்கு மருந்து அடிப்பது என மாறி, மாறி செய்து வருகிறோம். மஞ்சள் குலை செடிகளுக்குள் ஏற்படும் களைகளை களைக்கொல்லி அடித்து கருக செய்து வைத்திட முடியாது. அந்த களைகளை ஆட்கள் மூலம் எடுக்க வேண்டும். முன்புபோல் வேலை ஆட்கள் கிடைப்பதில்லை.

ஒரு பாத்தியில் 100 முதல் 125 வரையிலான மஞ்சள் மூடு இருக்கும். ஒரு சென்டில் 600 முதல் 700 வரை மஞ்சள் குலை மூடு இருக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு ஒரு மஞ்சள் குலை ரூ.18 முதல் ரூ.20 வரையும், சிறிய உயரமுள்ள மஞ்சள் குலை ரூ.10 முதல் ரூ.15க்கும் விலை போனது.

இந்தாண்டு களை எடுப்பு கூலி, உரம் விலை உயர்வு உள்ளிட்ட உற்பத்தி செலவு கடந்தாண்டைவிட அதிகரித்துள்ளதால் இந்தாண்டு விலை சற்று கூடுதலாக சென்றால் தான் எங்களுக்கு லாபம் கிடைக்கும். எனவே வியாபாரிகளை எதிர்பார்த்துள்ளோம். மேலும் அரசு எங்களுக்கு மானிய விலையில் உரம், மருந்து வழங்க வேண்டும், என்றார்.

Related Stories: