சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தில்லை திருச்சித்திரக்கூடம் ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோயிலில், வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை பாரம்பரிய முறையில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த முக்கிய வைணவ திருவிழாவில், வைகுந்த லோகத்திற்குச் செல்லும் கமாக கருதப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டு, ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பரமபத வாசல் தரிசனம் செய்தனர்.
இதனை முன்னிட்டு, விஷேஷ திருமஞ்சனம், வேத பாராயணம், திவ்ய பிரபந்த சேவை உள்ளிட்ட பூஜைகள் விமரிசையாக நடைபெற்றன. கோயில் வளாகம் முழுவதும் பக்தர்களின் கோவிந்தரா கோவிந்தா என்ற நாம முழக்கத்தால் ஆன்மீகமயமாக காட்சியளித்தது.
வைகுந்த ஏகாதசி நாளில் பரமபத வாசல் வழியாக தரிசனம் செய்தால், புண்ணிய பலன் கிடைத்து, மோட்சம் பெறும் வழி திறக்கும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். இதனால் சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் திரளானோர் கலந்து கொண்டனர்.
