திமுக மகளிர் மாநாட்டில் துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி பேசியதாவது: தொடு வானம் தோற்று விடும் அளவிற்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருப்பு சிவப்பாய் கூடிய மகளிரணி சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள். வெல்லும் தமிழ் பெண்கள் என்ற மாநாட்டிற்கு என்ன காரணம் என சிந்திக்க வேண்டும். நமக்கான ஆட்சியை, பெண்களுக்கான, பெண்களின் எதிர்காலத்தை பெருமைபடுத்தக் கூடிய ஆட்சியை நடத்திக் கொண்டிருக்க கூடிய முதல்வர் தளபதிக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு. மீண்டும் இந்த ஆட்சியை தரப்போகும் முதல்வர் தளபதிக்கு பின்னால் நாங்கள் இருக்கிறோம் என சொல்லும் மாநாடு இந்த மாநாடு.
இந்த தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவை பாதுகாக்கவேண்டியா கடமை உங்களிடத்தில் (முதல்வர்) உள்ளது. உங்கள் குரல் வந்த பிறகு தான் ஒவ்வொரு குரலாக பாசிச அரசுக்கு எதிராக வருகிறது. அதனால் தான் இந்த நாடு உங்களை நம்பி கொண்டிருக்கிறது என்பதை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறோம். நாட்டில் மதக்கலவரம், காழ்ப்புணர்ச்சி, வெறுப்புணர்வு அரசியல் செய்து கொண்டிருக்கும் பாஜகவுக்கு சம்மட்டி அடிகொடுக்கும் தமிழ்நாட்டின் திராவிட மாடல் முதல்வருக்கு பின்னால் அணி திரள்வோம். என்பதை உறுதிப்படுத்தவே இந்த மாநாடு. பெண்களுக்கான உறுதியை திமுக திராவிட மாடல் ஆட்சி கொடுத்திருக்கிறது. இது தொடர துணை நிற்போம். இவ்வாறு அவர் பேசினார்.
* கருப்பு, சிவப்பு சேலை அணிந்து வந்த பெண்கள்
மகளிர் அணி மேற்கு மண்டல மாநாட்டில் 1.5 லட்சம் மகளிர் கலந்து கொண்டனர். பெண்கள் அனைவரும் கட்சி கொடி வண்ணத்திலான கருப்பு, சிவப்பு நிறத்திலான சேலைகள் அணிந்து வந்திருந்தனர். இதுபோல் இளம்பெண்கள் கருப்பு, சிவப்பு நிற சுடிதார் அணிந்து கலந்து கொண்டனர். இதன் காரணமாக மாநாடு பகுதி முழுவதும் கருப்பு, சிவப்பு வண்ணத்தில் காட்சி அளித்தது, அனைவரையும் கவர்ந்தது.
* முதல்வருக்கு கருப்பு சிவப்பு
சீருடை பெண்கள் வரவேற்பு
மாநாட்டு பந்தலுக்கு தனது பிரசார வாகனத்தில் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நூற்றுக்கணக்கான பெண்கள் இரு சக்கர வாகனத்தில் கருப்பு உடை அணிந்து அணிவகுத்து அழைத்து வந்தனர். மகளிர் மாநாடு என்பதால் மகளிரை மட்டும் கொண்டு கலை நிகழ்சிகள் நடத்தப்பட்டது. இசைக்கச்சேரி, சிலம்பம், வாள் வீச்சு, பறையாட்டம் ஆகியவை பெண்கள் மூலமாகவே நடத்தப்பட்டது. இது மாநாட்டில் கலந்து கொண்டிருந்த பெண்களை உற்சாகமடைய செய்தது.
* 22,500 கிலோ பிரியாணி
திமுக மண்டல மாநாடு மற்றும் பொதுக்குழு கூட்டம் உள்ளிட்ட திமுக மாநாடு மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு எப்போதுமே சிறப்பான உணவு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று நடைபெற்ற மேற்கு மண்டலம் வெல்லும் தமிழ் பெண்கள் மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்க 13 மாவட்டங்கள், 39 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து வந்த திமுக தொண்டர்களுக்கு வழங்க வசதியாக தனியார் திருமண மண்டபத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவருந்தும் விதமாக 22,500 கிலோ கறிக்கோழி மூலம் சிக்கன் பிரியாணி மற்றும் முட்டை கிரேவி வழங்கப்பட்டது. இதற்காக சுமார் 1500க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் காலை முதல் சமையல் பணியில் ஈடுபட்டனர். தயார் செய்யப்பட்ட சிக்கன் பிரியாணி பேக்கிங் செய்து அனைவருக்கும் வழங்கினர். இந்த பணியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தனர். இதேபோல், மாநாட்டிற்கு வந்த பெண்களுக்காக கார சேவ், ரஸ்க், மிக்சர், கடலை பர்பி, மசால் கடலை, குளிர்பானம், பிஸ்கட் பாக்கெட் 2, குடிநீர் பாட்டில் உள்பட 10 பொருட்கள் மஞ்சப் பையில் போட்டு வழங்கப்பட்டது.
