- உலக விரைவு சதுரங்கம் கார்ல்சன்
- கோனேரு
- எரிகைஷி
- வெண்கலம்
- தோஹா
- மேக்னஸ் கார்ல்சன்
- உலக விரைவு சதுரங்க சாம்பியன்ஷிப் ஓபன்
- உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்
- தோஹா, கத்தார்...
தோஹா: உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் ஓபன் பிரிவு போட்டியில் உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் கத்தாரின் தோஹா நகரில் நடந்து வந்தன. ஓபன் பிரிவில் நடந்த போட்டிகளில், 13 சுற்றுகள் முடிவில் நார்வேயை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன், 10.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். ரஷ்ய கிராண்ட் மாஸ்டர் விளாடிஸ்லேவ் ஆர்டெமிவ், 9.5 புள்ளிகள் பெற்று 2ம் இடம் பிடித்தார்.
இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசியும் 9.5 புள்ளிகள் பெற்றார். இருப்பினும், புக்ஹோல்ட்ஸ் அடிப்படையில் அவருக்கு வெண்கலப்பதக்கமே கிடைத்தது. இப்போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர்களில் தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் அரவிந்த் சிதம்பரம், 8.5 புள்ளிகளுடன் 16வது இடத்தை பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் நிஹல் சரீன் 19வது இடமும், தமிழகத்தை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ் அடுத்த இடத்தையும் பிடித்தனர். மற்றொரு தமிழக வீரர் பிரக்ஞானந்தா, 28வது இடம் பெற்றார்.
மகளிர் பிரிவில், இந்தியாவை சேர்ந்த நடப்பு சாம்பியன் கொனேரு ஹம்பி, 8.5 புள்ளிகளுடன் 3ம் இடம் பிடித்து வெண்கலம் வென்றார். அதே புள்ளிகள் பெற்றிருந்த ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா கோர்யாச்கினா, சீனாவின் ஜு ஜினெர் ஆகியோர், கூடுதல் டைபிரேக் ஸ்கோர் பெற்றிருந்ததால், முதல் இரு இடங்களுக்கு டைபிரேக்கர் போட்டியில் மோதினர். அதில் வெற்றி பெற்ற கோர்யாச்கினா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இப்போட்டியில் இந்திய வீராங்கனை சவீதா 4ம் இடம் பெற்றார். தமிழகத்தை சேர்ந்த வைஷாலி 5, மற்றொரு இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் 8, ஹரிகா துரோணவல்லி 19வது இடங்களை பிடித்தனர். உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஓபன் பிரிவில் வெண்கலம் வென்ற அர்ஜுன் எரிகைசி, மகளிர் பிரிவில் வெண்கலம் வென்ற கொனேரு ஹம்பி ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி, எக்ஸ் சமூக வலைதளத்தில் வாழ்த்துகள் கூறியுள்ளார்.
