ஒன்றிய அரசின் 81.5% கடன் சுமை அதிகமா? தமிழ்நாட்டு அரசின் 26% கடன் அதிகமா ? :பிரவீன் சக்கரவர்த்திக்கு கோபண்ணா பதிலடி

சென்னை : தமிழ்நாடு அரசின் கடன் குறைவாகத்தான் உள்ளது என்று புள்ளி விவரம் வெளியிட்டு பிரவீன் சக்கரவர்த்திக்கு கோபண்ணா பதிலடி கொடுத்துள்ளார். நாட்டின் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதை புள்ளி விவரங்கள் நிரூபிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணா தெரிவித்துள்ளார். மேலும் அவர், “ஒட்டுமொத்த கடனை கொண்டு கடன் சுமையை அளவிடக் கூடாது, மாறாக ஜிடிபியுடன் ஒப்பிட்டே கணக்கிட வேண்டும்.இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்புடன் ஒப்பிடும்போது ஒன்றிய அரசின் கடன் 81.5 சதவீதமாக உள்ளது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்புடன் ஒப்பிட்டால் அரசின் கடன் 26 சதவீதமே உள்ளது. ஒன்றிய அரசின் 81.5 சதவீத கடன் சுமை அதிகமா? தமிழ்நாட்டு அரசின் 26% கடன் அதிகமா ?.

2014ல் ரூ.50 லட்சம் கோடியாக இருந்த ஒன்றிய அரசின் கடன் 2025ல் ரூ.200 லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது. மாநிலங்களின் கடன் அளவு அதிகரிப்பதுதான் பிரச்சனையா?. பிரவீன் சக்கரவர்த்தி தமிழ்நாட்டு அரசின் கடன் பற்றி விமர்சித்து இருப்பது உள்நோக்கம் கொண்டது. 2020-21ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் அரசின் நிதிப்பற்றாக்குறை குறைந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பிறகு தமிழ்நாட்டின் நிதிப்பற்றாக்குறை குறைந்து வருகிறது. 2020-21ல் 4.91 சதவீதமாக இருந்த தமிழ்நாடு அரசின் நிதிப் பற்றாக்குறை 2024-25ல் 3.26%ஆக சரிந்துள்ளது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 16% வளர்ச்சி பெற்று ரூ.31.19 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் சராசரி தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ.3.91 லட்சமாக உயர்ந்துள்ளது. தேசிய தனிநபர் ஆண்டு சராசரி வருமானமான ரூ.1.96 லட்சத்தை விட தமிழ்நாட்டின் தனிநபர் சராசரி வருமானம் அதிகம்.”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: