கொளத்தூர் ஏரிபூங்காவை ஜன. 10ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

பெரம்பூர்: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு வடசென்னை வளர்ச்சி திட்டத்தின மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை இன்று காலை ஆய்வு செய்தார். அவர், கொளத்தூர், ரெட்டேரி சாலை சந்திப்பு அருகில் கொளத்தூர் ஏரிக்கரை பூங்கா பகுதியை ஆய்வு செய்தார். பின்னர் கொளத்தூர், ரெட்டேரி சாலை சந்திப்பில் கட்டப்பட்டுவரும் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம், கொளத்தூர், பேப்பர் மில்ஸ் சாலையில் கட்டப்பட்டுவரும் புதிய வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் முதல்வர் படைப்பகம் எனப்படும் “மக்கள் சேவை மையம்” கொளத்தூர், பேப்பர் மில்ஸ் சாலையில் கட்டப்பட்டுவரும் புதிய நவீன சந்தை, கொளத்தூர், 70 அடி சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய காவல் துணை ஆணையர் அலுவலகம் மற்றும் பெரவள்ளூர் காவல் நிலையம், கொளத்தூர், அகரம், ஜெகநாதன் தெருவில் கட்டப்பட்டுவரும் கொளத்தூர் ரத்த சுத்திகரிப்பு மற்றும் மறுவாழ்வு மையம், திரு.வி.க. நகர் தொகுதி, பெரம்பூரில் சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் முரசொலி மாறன் பூங்கா உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

இதன்பின்னர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது; சூரிய உதயத்திற்கு முன்பு பணிக்கு சென்று சூரிய அஸ்தமனத்தையும் உதயத்தையும் காணாத மக்கள் இந்த மக்கள். இந்த மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வடசென்னை வளர்ச்சி திட்டம் என்ற திட்டத்தை தொடங்கி முதல் கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் செயல்படுத்த கொண்டு வந்தார். இந்த திட்டம் தொடர்ந்து வளர்ந்து 6 ஆயிரம் கோடி அளவிற்கு வட சென்னை வளர்ச்சி திட்டத்தில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மட்டும் 280க்கும் மேற்பட்ட பணிகளை மக்கள் தேவைகளை அறிந்து செய்து கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். கொளத்தூர் ஏரிக்கரை பூங்காவை ஜனவரி 10ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இதன்பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டி; திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று சொல்பவர்கள் விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். இரும்புக்கரம் என்று சொல்லும் கைகள் துருப்பிடித்து விட்டன என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளாரே? காமாலை கண் கொண்டவனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள் என்று சொல்வார்கள். நயினார் அவர் கட்சியில் டேக் ஆப் ஆகவில்லை. தமிழகத்தில்தான் ஜாதியால் இனத்தால், மொழியால் மக்களை பிளவுபடுத்த முடியவில்லை என்ற ஏக்கத்தில் பாரதிய ஜனதா இருக்கிறது. அதற்காக இப்படிபட்ட சொற்களை அவர்கள் பயன்படுத்துவது இயல்பு. நயினார் நாகேந்திரன் போன்றவர்களின் பிரிவினை வாதம் தமிழகத்தில் எடுபடாது. எடப்பாடி பழனிசாமி முழுமையாக பாரதிய ஜனதாவிற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார். ஆகவே அவர்கள் கொண்டுவரும் எந்த திட்டமாக இருந்தாலும் அதை புகழ்ந்து பேசுவது தான் அவர்கள் கொள்கையாக மாறிவிட்டது. அவர் பிடித்தால் பிள்ளையார் மற்றவர்கள் பிடித்தால் சாணம் என்ற நிலையில் அவர் அரசியல் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

திராவிடத்துக்கும் தமிழ் தேசியத்திற்கும் தான் போர் நடக்கிறது என்று சீமான் கூறுகிறாரே? அண்ணன் ஏதாவது இப்படி பேசிக்கொண்டிருந்தால்தானே அவர் களத்தில் இருப்பது தெரியும். அவரே நிறைய விஷயங்கள் மாற்றி மாற்றி பேசி இருக்கிறார். அதை நீங்கள்தான் வெளியீடு செய்தீர்கள். முன்னுக்குப் பின் முரணாக பேசுபவர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது எங்கள் அண்ணன் சீமான்தான்.இவ்வாறு கூறினார். விழாவில், மண்டல குழு தலைவர் சரிதா, பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ்குமார், சிஎம்டி ஏ உறுப்பினர் செயலர் பிரகாஷ், சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் கௌஷிக் கலந்துகொண்டனர்.

Related Stories: