புதுடெல்லி: கரூர் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், நடிகர் விஜய் தாமதமாக வந்தது ஏன் என்றும், சொகுசு பஸ்சின் வீடியோ குறித்தும், ஜனநாயகன் பட ஷூட்டிங் நடந்தது குறித்தும் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் உள்ள அலுவலகத்தில் வைத்து துருவி துருவி விசாரணை நடத்தினர். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் பிரசாரம் நடைபெற்றது. இந்த பிரசாரத்தின் போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்தில் நடிகர் விஜய் தாமதமாக வந்ததும், சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் மக்கள் கஷ்டப்பட்டதும் காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஆனால், விஜய் தரப்பினரோ, வழக்கில் இருந்து தப்பிக்க உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை கூறத் தொடங்கினர். இதனால், வழக்கை வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு இந்த விசாரணையைக் கண்காணித்து வருகிறது.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே கரூரில் விசாரணை நடந்த நிலையில், இன்று டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு முக்கிய நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசாரக் குழு செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன் ஆகியோர் இன்று நேரில் ஆஜராகினர். அப்போது பிரசார ஏற்பாடுகள், பாதுகாப்பு வசதிகள் மற்றும் கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான முக்கிய ஆவணங்களை அவர்கள் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். குறிப்பாக 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி பெறப்பட்ட நிலையில், 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை கூடியது குறித்தும், அனுமதி மீறல் குறித்தும் அவர்களிடம் அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அரசியல் பலத்தைக் காட்டுவதற்காகக் கட்சித் தலைவர் விஜய்யின் வருகையைத் தாமதப்படுத்தியதே கூட்ட நெரிசலுக்குக் காரணம் என உள்ளூர் போலீசார் குற்றம் சாட்டியிருந்தனர். ஆனால் இதனை தவெக நிர்வாகிகள் மறுத்து வருகின்றனர். இது குறித்தும், புஸ்ஸி ஆனந்திடம் துருவி துருவி விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், ஆதவ்விடம் ஜனநாயகன் பட ஷூட்டிங் மற்றும் விஜய் பயணம் செய்த காருக்குள் எடுக்கப்பட்ட வீடியோ குறித்தும் கேள்விகளை கேட்டு ஆதாரங்களை தரும்படி கேட்டதாகவும், நீண்ட நேரம் அவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த விசாரணை மேலும் தொடரும் என்று கூறப்படுகிறது. சிபிஐ கேட்ட கேள்விகளுக்கு அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. பல முறை கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அவர்கள் திணறியுள்ளனர். இந்த வழக்கில் அவர்கள் கைது செய்யப்படுவார்களோ என்ற அச்சம் அவர்களுக்கு அப்போது ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விசாரணையில் தாமதமாக செல்வது குறித்தும், கரூருக்கு வரும் நேரத்தில்தான் சென்னையில் இருந்து புறப்பட்டதற்கு காரணம் என்ன என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து விஜயிடம் விசாரணை நடத்த அவர்கள் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
