அமலுக்கு வந்துள்ள ‘விபி – ஜி ராம் ஜி’ திட்டத்தால் மாநிலங்களுக்கு ரூ.17,000 கோடி கூடுதல் நிதி கிடைக்கும்: எஸ்பிஐ ஆய்வறிக்கையில் தகவல்

புதுடெல்லி: புதிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தின் மூலம் மாநிலங்களுக்கு நிதி இழப்பு ஏற்படாது என்றும், மாறாக 17,000 கோடி ரூபாய் கூடுதல் நிதி கிடைக்கும் என்றும் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ‘விக்சித் பாரத் ரோஸ்கர் மற்றும் அஜீவிகா மிஷன்’ (விபி-ஜி ராம் ஜி) மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 21ம் தேதி ஒப்புதல் அளித்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சட்டத்தின் மூலம், கிராமப்புற குடும்பங்களுக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்பு உத்தரவாதம் 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இதுதொடர்பாக விரிவான ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் வடகிழக்கு மற்றும் மலைப்பிரதேச மாநிலங்களைத் தவிர்த்து, பிற மாநிலங்களில் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான நிதிப் பகிர்வு 60:40 என்ற விகிதத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநில அரசுகளுக்கு அதிக நிதிச்சுமை ஏற்படும் என்ற விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 7 ஆண்டுகளின் சராசரி ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது, இந்தப் புதிய முறையினால் மாநிலங்களுக்குக் கூட்டாக சுமார் 17,000 கோடி ரூபாய் வரை கூடுதல் நிதி கிடைக்கும்; எனவே மாநிலங்களின் நிதிநிலை பாதிக்கப்படும் அல்லது கடன் சுமை அதிகரிக்கும் என்ற அச்சம் தேவையற்றது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்படி உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அதிகப் பலன் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பீகார், சட்டீஸ்கர் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களும் அதிக நிதியைப் பெறவுள்ளன. தமிழ்நாடு உள்ளிட்ட ஓரிரு மாநிலங்களில் மிகக் குறைந்த அளவு இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிந்தாலும், கடந்த 2024ம் நிதியாண்டின் கணக்கீடுகளைத் தவிர்த்துப் பார்த்தால் அந்த இழப்பும் இருக்காது என்று எஸ்பிஐ குறிப்பிட்டுள்ளது. மேலும், ‘மாநில அரசுகள் தங்கள் பங்களிப்பான 40 சதவீத நிதியைத் திறம்படப் பயன்படுத்துவதன் மூலம் இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த முடியும்’ என்றும் அந்த அறிக்கையில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: