90,694 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ஒரே ஆண்டில் 3 சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிகள் நியமனம்: அரசியல் சாசன அமர்வு தீர்ப்புகள் சரிவு

புதுடெல்லி: இந்திய உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிகள் மாற்றம் மற்றும் வழக்குகள் தேக்கத்தால் 2025ம் ஆண்டு நீதித்துறைக்கு சவாலான ஆண்டாக அமைந்தது. இந்திய நீதித்துறையின் வரலாற்றில் உச்ச நீதிமன்றத்திற்கு மிகவும் சோதனையான காலமாக 2025ம் ஆண்டு அமைந்தது என்று ‘சுப்ரீம் கோர்ட் அப்சர்வர்’ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் நம்ரதா பானர்ஜி எழுதியுள்ள அந்தத் தொகுப்பில், ஒரே ஆண்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யகாந்த் என மூன்று தலைமை நீதிபதிகள் பதவி வகித்தது நிர்வாக ரீதியில் நிலையற்ற தன்மையை உருவாக்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதித்துறையானது பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் செயல்பட வேண்டிய சூழல் நிலவியதாகவும், கொலிஜியம் தொடர்பான கருத்து வேறுபாடுகள் மற்றும் நிர்வாக ரீதியிலான சிக்கல்கள் நீதிமன்றத்தின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வழக்குகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது கவலையளிக்கும் விதமாக உள்ளது. கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி, 90 ஆயிரத்து 694 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இது ஜனவரி மாதத்தை விட சுமார் 8,200 வழக்குகள் அதிகமாகும். முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் சாசன அமர்வு தீர்ப்புகளின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் 18 தீர்ப்புகளும், 2024ம் ஆண்டில் 12 தீர்ப்புகளும் வழங்கப்பட்ட நிலையில், 2025ம் ஆண்டில் வெறும் 4 அரசியல் சாசன அமர்வு தீர்ப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: