இந்தியா முழுவதும் தங்கள் அட்டவணையில் நாள் ஒன்றுக்கு 130 விமான சேவைகளை குறைத்துள்ளது இண்டிகோ நிறுவனம்!!

டெல்லி : இந்தியா முழுவதும் 94 வழித்தடங்களில் நாள் ஒன்றுக்கு 130 விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் குறைத்துள்ளது. விமானிகளுக்கு அதிக ஓய்வு கொடுக்கும் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டதன் காரணமாக விமானிகள் பற்றாக்குறையால் தொடர்ந்து இண்டிகோ விமான சேவை டிசம்பர் மாத தொடக்கத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் வழித்தடங்களில் பாதிப்பு ஏற்படாதபடி,10% விமான சேவையை குறைக்க டிஜிசிஏ உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்தியா முழுவதும் தங்கள் அட்டவணையில் 94 வழித்தடங்களில் நாள் ஒன்றுக்கு 130 விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் குறைத்துள்ளது. இதில் பெங்களூருவில் தான் அதிக உள்நாட்டு விமான சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து ஐதராபாத், சென்னை, கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் விமான சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் விமான சேவை குறைக்கப்படவில்லை. மும்பையில் வருகை – புறப்பாடு என இரண்டு விமானங்கள் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு நாட்களில் திட்டமிடப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை சற்று மாறுபடக்கூடும் என்பதால் மற்ற நாட்களுக்கான அட்டவணை மாற்றங்களில் சிறிய வேறுபாடுகள் இருக்கலாம் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories: