- தேசிய பூப்பந்து சாம்பியன்ஷிப்
- ரித்விக் சாம்பியன்
- விஜயவாடா
- ரித்விக் சஞ்சீவி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- 87 வது தேசிய பேட்மிண்டன் சாம்பிய
விஜயவாடா: தேசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ரித்விக் சஞ்சீவி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். விஜயவாடாவில் 87வது தேசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வந்தன. ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நேற்று, தமிழகத்தை சேர்ந்த ரித்விக் சஞ்சீவி-பரத் ராகவ் மோதினர். போட்டியின் முதல் சுற்றில் அபாரமாக ஆடிய ரித்விக், 21-16 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது சுற்றில் பரத் ஈடுகொடுத்து ஆடினார்.
இருப்பினும், அந்த செட்டையும், 22-20 என்ற புள்ளிக் கணக்கில் ரித்விக் வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அவர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். ரித்விக், அரையிறுதிப் போட்டியில் கேரளாவை சேர்ந்த, உலகளவில் 38ம் நிலை வீரரான கிரண் ஜார்ஜை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. தவிர, மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று, ஆந்திராவை சேர்ந்த சூர்ய சரிஸ்மா தமிரி, ஒடிசாவை சேர்ந்த தான்வி பத்ரி உடன் மோதினார். இப்போட்டியின் முதல் செட்டில் ஆக்ரோஷமாக ஆடிய தான்வி, 21-17 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார்.
இருப்பினும், அடுத்த இரு செட்களில் அட்டகாச ஆட்டத்திறனை வெளிப்படுத்திய சூர்ய சரிஸ்மா, 21-12, 21-14 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்களை வசப்படுத்தினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வென்ற அவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் சாத்விக் ரெட்டி, ராதிகா சர்மா இணை, 21-9, 21-15 என்ற நேர் செட் கணக்கில் ஆசித் சூர்யா, அம்ருதா இணையை வெற்றி கண்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
