மக்கள் சேவை செய்யாதவர்கள் முதல்வராக ஆசைப்படலாமா? நடிகர் விஜய் மீது அதிமுக அட்டாக்

மதுரை: மக்கள் சேவை செய்யாதவர்கள் முதல்வராக ஆசைப் படலாமா? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் நடிகர் விஜய்யை தாக்கி பேசி உள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மதுரையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எத்தனை பேர் சென்றாலும் என்ன? அதிமுக நெஞ்சுரத்துடன் உள்ளது. சிலர் சட்டமன்றத்தை பார்க்காதவர்கள், போகாதவர்கள், மக்களுக்கு சேவை செய்யாதவர்கள்…

இவர்கள் பேசுகிறார்கள். இவர்கள் கருத்துக்கான மதிப்பினை தேர்தல் களத்தில் தான் மக்கள் பதிலாக சொல்வார்கள். மக்களுக்கு சேவை செய்த பின்பு தான் சட்டமன்றத்தில் முதலமைச்சராக வரமுடியும். அறிஞர் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி, கட்சி தொடங்கி, அதன் பின்பு தான் முதலமைச்சராக வந்தார்கள். அதேபோல எம்பி, எம்எல்ஏவாக இருந்துதான் ஜெயலலிதா முதலமைச்சராக வந்தார்.

எடப்பாடி பழனிசாமியும் எம்எல்ஏ, அமைச்சராகி அதனை தொடர்ந்தே முதலமைச்சராக வந்தார். தனிநபர் முதலமைச்சராவேன் என்றால் அதையெல்லாம் கருத்தில் கொள்ள முடியாது. தேர்தல் களத்தில் அனுபவம் இருக்க வேண்டும். கூட்டணி பற்றி முழு முடிவு எடுக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கே உள்ளது. அவர்தான் முடிவெடுப்பார் என்று அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு நிறைவேற்றும் திட்டங்களை அதிமுக அறிவிக்கும். இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: