×

சமூக நீதிக்கும், சமவாய்ப்புக்கும் எதிரான நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு தர ஒன்றிய அரசு முன்வர வேண்டும்: நாதக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் திருவேற்காட்டில் நடந்தது. இதில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பொதுக்குழு கூட்டத்தை தொடங்கி வைத்தார். பொதுக்குழுவில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தை நாம் தமிழர் கட்சி மிகக் கடுமையாக எதிர்க்கிறது. ஒரு கோடி வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறித்திருப்பதென்பது ஏற்கவே முடியாத ஜனநாயக படுகொலையாகும்.

வடநாட்டவர் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, இருப்பிடச்சான்று உள்ளிட்டவை பெற்று நிரந்தரமாக தமிழ்நாட்டில் குடியேறும் நிகழ்வும் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி, கொலை, கொள்ளை, போதைப்பொருள், கடத்தல், பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட கொடுங்குற்ற செயல்களில் வடமாநிலத்தவர்கள் ஈடுபடுவதும், கும்பல் மனப்பான்மையில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன.

ஆகவே, தமிழ்நாட்டிற்குள் பணிக்கு வரும் வடமாநிலத்தவரின் எண்ணிக்கை, பணிபுரியும் நிறுவனம், காலம், தங்கும் இடம், அவர்களின் சொந்த முகவரி ஆகியவற்றைப் பதிவு செய்யும் வகையில் உடனடியாக உள்நுழைவு அனுமதிச் சீட்டு முறையை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்த, தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.  சமூக நீதிக்கும், சமவாய்ப்புக்கும் எதிரான நீட் தகுதித்தேர்வுக்கு எதிராக தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்து, நீட் தேர்விலிருந்து நிரந்த விலக்குதர ஒன்றிய அரசு முன்வர வேண்டும்,

தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்ட முன்வரைவுகளுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என்பது உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தேர்தல் அரசியலை நோக்கி குறி வைப்பதால் மக்கள் அரசியலை பற்றி கட்சிகள் கவலைப்படுவதில்லை. நல்லகண்ணு யாருன்னு தெரியவில்லை, நடிகர் நாடாள தயாராக இருக்கிறார்.

மக்கள் தாங்களே புரட்சி செய்வார்கள் என லெனின் கூறினார். அதற்கு சான்று இலங்கை, வங்கதேசம், நேபாளம் பற்றி எரிந்தது. 234 தான் எங்கள் இலக்கு.‌ நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றுவது எங்கள் இலக்கு. எப்படி பார்த்தாலும் இலவசம் என்பது வளர்ச்சி திட்டம் அல்ல வீழ்ச்சி. விஜய்யையும், என்னையும் பாஜ பெற்று எடுக்கும் போது அருகில் இருந்து பிரசவம் பார்த்து விட்டது எங்கள் அண்ணன் திருமாவளவன் தான். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Union government ,Tamil Nadu ,NATHA ,Chennai ,Naam Tamilar Party ,Thiruverkaud ,chief coordinator ,Seeman ,Naam… ,
× RELATED கூட்டணி இன்னும் அமையாததால் விரக்தி...