×

டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் ஜனவரி 8ம் தேதி கோட்டை நோக்கி பேரணி

சென்னை: டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில் திரும்பபெறும் திட்டம் என்ற பெயரில் ஒவ்வொரு மதுபாட்டில் மீதும் ஸ்டிக்கர் ஒட்டுவது, வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக ரூ. 10ஐ பெறுவது என ஏராளமான பணிகள் ஊழியர்கள் மீது திணிக்கப்படுகிறது. இத்தகைய பணிகள் திணிக்கப்படுவதால் வேலைப்பளுவும் கூடியுள்ளது.

இதுமட்டுமல்லாமல் மது அருந்திய நபர்கள் காலி பாட்டிலை கொடுக்கும் போது அந்த பாட்டில்கள் அசுத்தமானதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் உள்ளதால் சுகாதாரகேடுக்கு ஆளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் கடை ஊழியர்களை கொண்டுதான் அமல்படுத்த வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் டாஸ்மாக் நிர்வாகம் ஊழியர்கள் அசுத்தமான பாட்டில்களை கையாள வேண்டும் என்று மிரட்டி பணியவைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இதனை கையாளும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களைக்கூட நிர்வாகம் வழங்காமல் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துகிறோம் என்பதை மட்டும் காரணம் காட்டி வருகிறது. மேலும், டாஸ்மாக் நிர்வாகத்தின் கூடுதல் வேலைபளு திணிப்பு, ஊழியர்களின் சுகாதாரம் பாதிப்பு உள்ளிட்டவைகளை தமிழ்நாடு அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு மாற்றுத்திட்டத்தை உருவாக்கி அமல்படுத்தவும், ஊழியர்கள் மேல் திணிப்பதை கைவிட வேண்டும்.

அந்தவகையில், அரசு காலி மதுபாட்டில் திரும்பபெறும் திட்டத்தை ஊழியர்களிடம் திணிப்பதை கைவிடவும் மாற்றுத்திட்டத்தை அமல்படுத்தவும், ஊழியர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தவும் வலியுறுத்தி கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஜன.8ம் தேதி சென்னையில் கோட்டை நோக்கி பேரணி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பேரணி முடிவில், டாஸ்மாக் ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளான பணிவரன்முறை, காலமுறை ஊதியம் உள்ளிட்ட 35 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்ட தேதியை அறிவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : TASMAC unions ,Fort ,Chennai ,Joint Action Committee ,TASMAC ,
× RELATED கூட்டணி இன்னும் அமையாததால் விரக்தி...