புதுடெல்லி: உன்னாவ் பாலியல் வழக்கில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கியது. இருப்பினும், சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், செங்காருக்கு ஏற்கனவே 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவர் தொடர்ந்து சிறையில் உள்ளார்.
இந்நிலையில், செங்கார் வெளியே வந்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படும் என்றும், சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு கருணை காட்டக்கூடாது என்றும் கூறி சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டது. ‘போக்சோ சட்டத்தின் கீழ் பொது ஊழியர் என்ற வரம்பிற்குள் செங்கார் வரமாட்டார்’ என உயர்நீதிமன்றம் கூறியதை சிபிஐ கடுமையாக எதிர்த்துள்ளது. அதேவேளையில், செங்காரின் ஜாமீன் உத்தரவு ‘எங்கள் குடும்பத்திற்கு மரணத்தை போன்றது’ என பாதிக்கப்பட்டப் பெண் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் தனியாக மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. முன்னதாக உயர்நீதிமன்றம் 15 லட்சம் ரூபாய் பிணைத்தொகை மற்றும் பாதிக்கப்பட்டவர் வீட்டிலிருந்து 5 கி.மீ தூரத்திற்குள் வரக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
