28.12.2025 – ஞாயிறு
வாயிலார் நாயனார் குரு பூஜை
சதாசர்வகாலமும் சிவனை நினைந்து சிவபதம் அடைந்த நாயனார் வாயிலார் நாயனார். சென்னை திருமயிலையில் அவதரித்தவர். இவரைப் பற்றிய பெரிய கதைகளும் வரலாற்று குறிப்புகளும் இல்லை என்றாலும்கூட, இவருடைய சந்நதி மயிலை கற்பகாம்பாள் சந்நதியில் உள்ளது. சுந்தரரும் சேக்கிழாரும் இவரைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்கள். வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச் எப்பொழுதும் வழங்க வேண்டும் என்று அப்பர் பாடி உள்ளபடி மனதையே ஆலயம் ஆக்கிக்கொண்டு, ஞானத்தை திருவிளக்கு ஆக்கி, ஆனந்தத்தை அவருக்கு தருகின்ற திருமஞ்சனமாக்கி, அன்பு என்கிற திரு அமுது படைத்து பூஜை செய்தவர் வாயிலார் நாயனார். மனதில் எப்போதும் சிவசிந்தனையும், சிவபூஜையும் செய்து கொண்டு இருந்ததே இவருடைய பேற்றுக்கு காரணம். அவருடைய குருபூஜை மார்கழி ரேவதி நட்சத்திரத்தில் அதாவது இன்று நடைபெறுகிறது.
29.12.2025 – திங்கள்
நாச்சியார் கோலம்
பகல் பத்து உற்சவத்தின் கடைசி நாளான இன்று, ரங்கத்தில், நம்பெருமாள் நாச்சியார் கோலத்தில் அதாவது மோகினி அலங்காரத்தில் காட்சி தருவார். இந்த காட்சி அற்புதமாக இருக்கும். பெரிய நெற்றிச் சுட்டி, தங்கக் கிளி, நீண்ட ஜடை, வளையல்கள், மோதிரங்கள் மற்றும் பவள மாலைகள் அணிந்திருப்பார். வெண்பட்டுச் சேலையில் குத்திட்டு அமர்ந்து சேவை சாதிப்பார், ஒருமுறை இந்த நாச்சியார் கோலத்தோடு பெருமாள் வலம் வந்தபோது பராசர பட்டரைப் பார்த்து நம்முடைய நாச்சியார் கோலம் அலங்காரம் எப்படி இருக்கிறது, பெரிய பிராட்டியாரான ரங்கநாயகித் தாயாரை மிஞ்சும் வகையில் இருக்கிறதா என்று கேட்டதாகவும், பட்டர், அலங்காரம் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால் அந்த விழி அழகு நீர் பெருமாள் என்பதைக் காட்டிக் கொடுத்து விடுகிறது. பெருமாளும், பட்டரின் வார்த்தையை ரசித்தாராம். இது ரச அனுபவமாக பெரியோர்களால் சொல்லப்படுகிறது.தாத்பர்யம் என்ன என்றால், ரங்கத்து தாயாரின் தாய்மை உணர்வை வெளிப்படுத்தும் விழி அழகை பெருமாளும் விரும்புகிறார். அதற்கான குறியீடுதான் இந்த நாச்சியார் திருக்கோலம். பாற்கடலைக் கடைந்த பொழுது கிடைத்த அமுதத்தை அசுரர்களுக்குத் தராமல் தேவர்களுக்குத் தருவதற்காகவே இந்த அவதாரத்தை பெருமாள் எடுத்தார் என்றும் கூறுவது உண்டு.
30.12.2025 – செவ்வாய் வைகுண்ட ஏகாதசி
தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் இன்று வைகுண்ட ஏகாதசி பெருநாள் நடைபெறும். இந்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி, முக்கோடி ஏகாதசி, பரமபத ஏகாதசி, சொர்க்கவாசல் திருநாள் என்று பல பெயர்களுடன் அழைப்பார்கள். இன்று ரங்கத்தில் மூலவரான பெரிய பெருமானை ரத்னாங்கி சேவையாகவும், (ரத்தினங்கள் பதித்த ஆடை) உற்சவரான நம்பெருமாளை முத்தங்கி சேவையிலும் (முத்துக்கள் பதித்த ஆடை) தரிசனம் செய்யலாம். உதயத்திற்கு முன் பெரும்பாலான கோயில்களில் பரமபத வாசல் திறக்கப்படும். திருவரங்கத்தில் காலை 4 மணிக்கு பரமபதவாசல் திறப்பு நடக்கும். கிட்டத்தட்ட இதே காலங்களில் திருவல்லிக்கேணியில் பரமபத வாசல் திறக்கப்படும். இதனை சொர்க்கவாசல் என்றும் மோட்சவாசல் என்றும் அழைப்பார்கள். பெரிய கோயில்களில் வடக்குப் பகுதியில் இந்த வாசல் எப்பொழுதும் மூடியே வைக்கப்பட்டிருக்கும். வைகுண்ட ஏகாதசியை ஒட்டி மட்டுமே திறக்கப்படும். இந்த வாசல் வழியாக பக்தர்கள் பெருமாளை அன்றையதினம் சேவிப்பது புண்ணியம். பல பெருமாள் கோயில்களில் கருட வாகனத்தில் பெருமாள் அன்றைய தினம் வீதி உலா வருவதும் உண்டு. இன்று முழுவதும் திட உணவுகள் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருக்க வேண்டும். பகவானுடைய புராண இதிகாசக் கதைகளை கேட்க வேண்டும் அல்லது படிக்க வேண்டும். ஸ்தோத்திரங்களையும், ஆழ்வார்கள் பாசுரங்களையும் ஓத வேண்டும்.
இன்று இரவு கண் விழித்து நாளை சூரிய உதயத்திற்கு முன் துவாதசி பாரணை செய்ய வேண்டும். இந்த துவாதசிக்கு கூர்ம துவாதசி என்று பெயர். துவாதசி அன்று வாழைப்பூ வாழைக்காய் போன்ற வாழை தொடர்புடைய விஷயங்களை விலக்கச் சொல்லியிருக்கிறார்கள். அதைப் போலவே சில குறிப்பிட்ட காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது. கத்தரிக்காய், புடலங்காய், பாகற்காய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, கடுகு, மிளகாய், கொத்தமல்லி, புளி முதலியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. எண்ணெயிலும் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் தவிர்த்துவிட்டு, நெய் அல்லது தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம். அன்று அவசியம் நம்மால் இயன்றளவு தானம் செய்ய வேண்டும். அதிதி பூஜை செய்து உணவளிக்க வேண்டும். அன்றைய தினம் ஒரு பாகவதருக்கு உணவு தந்தால் அதைவிட பெரும் சிறப்பு இருக்க முடியாது. இப்படி சகல வழிகளிலும் மிகச் சிறப்புடையதாக மார்கழி மாதத்துக்கே உரிய இந்த ஏகாதசி விரதத்தை நாம் ஒவ்வொருவரும் அனுசரித்து அந்த வைகுண்டநாதன் அருளைப் பெறுவோம். துவாதசி பாரணையை சரியாக செய்தால்தான் ஏகாதசி விரதம் கடைபிடித்த பலன் கிடைக்கும்.
1.1.2026 – வியாழன்
பிரதோஷம் ஆங்கிலப்புத்தாண்டு
மாதந்தோறும் இருமுறை – வளர்பிறை, தேய்பிறை நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்த நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். பிரதோஷ நாட்களில், சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும். இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். ஏழரைச் சனி, அஷ்டம சனி, கண்டச் சனி மற்றும் சனிதிசை புத்தி நடப்பவர்கள், சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும். பிரதோசத்தன்று நந்திதேவனுக்கு அறுகம்புல் அல்லது வில்வம் சாற்றி, நந்திதேவரின் கொம்புகளுக்கு இடையே இறைவனை தரிசிப்பது பெரும் சிறப்பை தரும்.
2.1.2026 – வெள்ளி
சிதம்பரம் தேர்
சிதம்பரம் நடராஜர் கோயிலின் மார்கழி ஆருத்ரா தேர் திருவிழா, ஒன்பதாம் நாளான இன்று நடைபெறுகிறது. நடராஜர், சிவகாமசுந்தரி, சுப்பிரமணியர், விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் என ஐந்து தேர்கள் வலம் வரும். கீழவீதி தேரடியில் இருந்து தொடங்கும் வலம், தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு வீதிகள் வழியாகச் சென்று மாலையில் நிலை அடையும். மேலவீதியில் உள்ள கஞ்சித்தொட்டி அருகே உள்ளூர் மீனவர்கள் உபயம் செய்ய சிறப்பு தீபாராதனை செய்யப்படும். நிலைக்கு வந்தவுடன் ஆயிரங்கால் மண்டபத்திற்குக் எழுந்தருள, அங்கு `லட்சார்ச்சனை’ செய்யப்படும். சூரிய உதயத்திற்கு முன், ஆயிரங்கால் மண்டபத்தில் `மகாபிஷேகம்’ மற்றும் `புஷ்பாஞ்சலி’ செய்யப்படும். சித்சபைக்குள் ரகசிய பூஜை நடைபெறும். நாளை சனிக்கிழமைஆருத்ரா தரிசனம்.
2.1.2026 – வெள்ளி
நடனகோபாலர் திருநட்சத்திரம்
மந் நடனகோபால சுவாமிகள், மதுரையில் பால்மால் தெருவில் வாழ்ந்து கொண்டு இருந்த நெசவாள தம்பதியினருக்குப் மார்கழி மாதம் மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தார். தமிழிலும் சௌராஷ்டிர மொழியிலும் அருமையான கீர்த்தனைகளைப் பாடி இருக்கிறார். அக்கீர்த்தனைகள் மனதை உருக்கும். தந்தையின் பெயர் ரங்கா ஐயர். தாயாரின் பெயர் லஷ்மிபாய். அவருக்கு ராமபத்ரன் என்று பெயரிட்டனர். ராமபத்திரன், பள்ளியில் சேர்ந்தாலும் படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்தார். தொழிலில் ஈடுபடுத்தலாம் என்று இவருக்கு நெசவுத் தொழிலைக் கற்றுத் தந்தனர். தொழிலிலும் அவருக்கு ஆர்வம் இல்லை. ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல் அவர் வீட்டை விட்டு வெளியேறினார். தமது 16 வது வயதில் துறவறம் பூண்டார். தென்பரங்குன்றத்தில் ஒரு குகையில் 12 ஆண்டுகள் கடும் துறவு வாழ்க்கை மேற்கொண்டார். இதன் பெயர் குகாசிரமம். ஆன்மிகத் தெளிவு பெற, ஒரு குருவைத் தேடி பரமக்குடிக்குச் சென்றார். அங்கே யோகக்கலையில் வல்ல நாகலிங்க அடிகளார் என்னும் ஒருவரிடம் சீடராகச் சேர்ந்து கொண்டார். அவரிடம் யோகக் கலையைப் பயின்றார். நாகலிங்க அடிகளார் இவருடைய வேகத்தையும் பக்தியையும் மெச்சி, சதானந்த சித்தர் என்று பெயர் சூட்டினார். யோக சித்தியால் பல அதிசயங்களை நடத்தினாலும், ஆன்மிகத்தில் அவருக்கு ஒரு மன நிறைவும் தெளிவும் ஏற்படவில்லை.
நம்மாழ்வார் அவதாரம் செய்த ஆழ்வார்திருநகரி என்னும் திருத்தலத்திற்குச் சென்றார். அந்த பெருமாளையும் ஆழ்வாரையும் தரிசித்தவுடன் அவருக்கு ஒரு சிறிய ஒளி கிடைத்தது. அந்தத் தலத்தில் வடபத்திர அரையர் என்கின்ற ஆச்சாரியரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர், “உன்னுடைய ஆன்மிக வாழ்வுக்கு இந்த சித்திகள் உதவாது. சித்திகளை விடு. சித்தோ பாயமான பெருமானைப் பிடி’’ என்று உபதேசம் செய்ததோடு இவருக்கு பஞ்ச சம்ஸ்காரமும் செய்து வைத்தார். ஆழ்வார் பாசுரங்களில் ஆழங்கால் பட்ட அவர், அவ்வப்பொழுது தன்நிலை மறந்து தன்னை நாயகியாகவும் இறைவனை நாயகனாகவும் எண்ணிக் கொண்டு நடனமாடி தன்னுடைய தாய்மொழியான சௌராஷ்டிரத்திலும் தமிழிலும் அருமையான பாடல்களைப் பாட ஆரம்பித்தார். ஒரு பெண்மணிக்கு வெகு காலம் குழந்தை இல்லாமல் இருந்தது. நடன கோபால சுவாமிகள் அந்த பெண்ணை ஆசீர்வதித்து, “அம்மா, ஒன்றும் கவலைப்படாதே. நான் திருமலைக்குச் சென்று வருவதற்குள் நீ ஒரு குழந்தையைப் பெற்று எடுப்பாய்’’ என்று ஆசீர்வாதம் செய்துவிட்டு திருமலை யாத்திரை கிளம்பினார். திரும்ப அந்த ஊருக்கு வந்த பொழுது அவருடைய ஆசீர்வாதம் பலித்து இருந்தது. கருவுற்றிருந்த அந்தப் பெண் தன்னுடைய பட்டுப்புடவை, நகைகள் இவற்றையெல்லாம் நடன கோபால சுவாமிகளின் காலடிகளில் வைத்து இந்தக் காணிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரார்த்தனை செய்தாள்.
அங்கேயே அந்தப் பெண்மணி கொடுத்த சேலையை அணிந்து கொண்டு, வளையல்களையும் போட்டுக் கொண்டார். காலில் சதங்கை கட்டிக் கொண்டு ஆட ஆரம்பித்தார். நிஜமாகவே தன்னை ஒரு பெண்ணாகக் கருதிக்கொண்டு, நாயகி பாவத்தில் எம்பெருமான் மீது பல பக்திப் பாடல்களைப் பொழிந்தார். பல திவ்ய தேசங்களுக்கு யாத்திரை சென்றார். ஆழ்வார்கள் பலரின் பாடல்களின் தாக்கம் அவர் கீர்த்தனைகளில் உண்டு.தான் மோட்சம் அடைவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே தமது சீடர்களிடம் சொல்லி, அழகர்கோயில் அருகிலுள்ள காதக்கிணறு என்னுமிடத்தில் தமக்கான பிருந்தாவனத்தை அமைக்குமாறு கூறினார். அவருக்கான ஆலயம், “நடன கோபால நாயகி மந்திர்’’ என்ற பெயரில் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் மேல் வீதியில் உள்ளது. நடனகோபால நாயகி ஜெயந்தி விழாவை அங்கு வருடா வருடம் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அப்போது அவர் பயன்படுத்திய ஆடைகள், தலைப்பாகை, சலங்கை, வளையல்கள் முதலியவற்றை நாம் தரிசிக்கமுடியும்.
