பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாலுகாவில் 93,224 பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகள் தயார்

*ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரம்; அதிகாரிகள் தகவல்

பொள்ளாச்சி : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொள்ளாச்சி தாலுகாவில் 93,224 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்க ரேஷன் கடைகளுக்கு நேரடியாக அனுப்பும் பணிகள் தீவிரமடைந்துள்ளது என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேஷன் கடைகள் மூலம் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வாங்கும் வருமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இலவச, வேட்டி சேலைகள் விநியோகம் செய்யப்படுகிறது.

அதன்படி வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுக்காவுக்கு உட்பட்ட நகரம் மற்றும் கிராமங்களில் முழு நேர ரேஷன் கடைகள், பகுதி நேர ரேஷன் கடைகள் என மொத்தம் 144 ரேஷன் கடைகள் செயல்படுகிறது.

இந்த கடைகள் மூலம் சுமார் 1 லட்சத்து 37 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. அதில், ரேஷன் பொருட்கள் வாங்கும் வருமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, பொங்கலையொட்டி இலவச வேட்டி, சேலை விநியோகம் செய்வதற்காக, இலவச வேட்டி, சேலை பெறும் பயனாளிகள் பட்டியல், வருவாய்த்துறை மூலம் தயார்படுத்தப்பட்டது.

நகரம் மட்டுமின்றி கிராம பகுதிகளில் உள்ள அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் பயனாளிகள் பெயர்களை பதிவு செய்யும் பணிகளில் கடந்த சில வாரமாக வருவாய்த்துறையினர் தீவிரமாக இறங்கினர்.

தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில், தாலுகாவிற்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் பொது விநியோக திட்டத்தின்கீழ் பொருட்கள் வாங்குவோரில் சுமார் 93 ஆயிரத்து 224 ரேஷன் கார்டு தாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி பயனாளிகளுக்கு வழங்க இலவச வேட்டி சேலைகள், அந்தந்த பகுதி ரேஷன் கடைகளுக்கு நேரடியாகவே வழங்கும் பணியில் வருவாய்த்துறையினர் தீவரமாக இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பொள்ளாச்சி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள முழு நேரம் மற்றும் பகுதி நேர ரேஷன் கடைகளில் பொது விநியோக திட்டத்தில், வருமை கோட்டுக்கு கீழ் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி (2026) மாதம் முதல் வாரம் முதல் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகிறது. இதையொட்டி, நகர் மற்றும் கிராமங்கள் வாரியாக, விஏஓகள் மூலம் பயனாளிகள் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்றது.

இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், எத்தனை பேருக்கு இலவச வேட்டி சேலை வழங்குவது என இறுதி பட்டியல் மாவட்ட நிர்வாகத்தக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தயார்படுத்தப்பட்டுள்ளது. இதில், தாலுகாவுக்கு உட்பட்ட பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, பெரிய நெகமம், கோலர்பட்டி, ராமபட்டிணம் ஆகிய உள் வட்டங்களிலும் சேர்த்து ஆண்கள் 93 ஆயிரத்து 224 பேருக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது, ரேஷன் கடைகளுக்கு இலவச வேட்டி சேலைகள் அனுப்பும் பணிகள் நடக்கிறது. முழுமையாக, வேட்டி சேலைகள் வரப்பெற்றவுடன், அரசின் முறையான உத்தரவுபடி, உரிய பயனாளிகளுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கும் பணிகள் துவங்கப்படும்’’ என தெரிவித்தனர்.

Related Stories: