சபரிமலையில் இன்று மண்டல பூஜை

திருவனந்தபுரம்: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டது. 41 நாள் நீண்ட மண்டல காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று காலை 10.10க்கும் 11.30க்கும் இடையே பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. மண்டல பூஜைக்கு முன்னதாக ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்படும் தங்க அங்கி நேற்று மாலை சன்னிதானத்தை அடைந்தது.

தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. தங்க அங்கி அணிந்த ஐயப்பனை தரிசிப்பதற்காக நேற்று மாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்திருந்தனர். இன்று மண்டல பூஜைக்கு பின்னர் இரவு 11 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை வரும் 30ம் தேதி திறக்கப்படும். மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

30 லட்சம் பக்தர்கள் தரிசனம்: இந்தாண்டுக்கான மண்டல பூஜைகளுக்காக சபரிமலை நடை நவ.16-ம் தேதி திறக்கப்பட்டது. நவ.17-ம் தேதி அதிகாலை முதல் மண்டல பூஜை தொடங்கியது. அன்று முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த சீசனில் சனி, ஞாயிறு தினங்களில் பக்தர்கள் கூட்டம் மிகவும் குறைவாக காணப்பட்டது. மற்ற நாட்களில் அதிகமான கூட்டம் காணப்பட்டது. சபரிமலை கோயிலுக்கு இதுவரை வருகை தந்த பக்தர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது.

Related Stories: