பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 20 சிறுவர்களுக்கு தேசிய விருது: ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்

புதுடெல்லி: பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 20 சிறுவர்களுக்கு பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதை ஜனாதிபதி முர்மு வழங்கினார். வீரம், கலை, கலாசாரம், சமூக சேவை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்கு பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருது ஆண்டுதோறும் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

சீக்கியர்களின் 10வது குருவான குரு கோவிந்த் சிங்கின் இரண்டு இளைய மகன்களான ஜோராவர் சிங், பதே சிங் ஆகியோரின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் டிசம்பர் 26ம் தேதி வீர பாலர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வீரத்துடனும் விவேகத்துடனும் சாதனைகள் புரிந்த சிறுவர்களுக்கு பிரதமரின் தேசிய பாலர் விருது வழங்கப்படுகிறது .அந்த வகையில் , இந்தாண்டுக்கான விருதுக்கு 20 சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிறுவர்களுக்கான விருதை டெல்லி, விக்யான் பவனில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வழங்கினார். விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் விருது பெற்றவர்களுக்கு தனது ஆசிகளை வழங்கி, அவர்களது குடும்பத்தினரை வாழ்த்தி பேசிய ஜனாதிபதி முர்மு,‘‘ அனைத்து குழந்தைகளுக்கும் எனது ஆசிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இளம் சாதனையாளர்கள் தங்கள் குடும்பங்களுக்கும் சமூகங்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர். அவர்களின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவிற்கும் நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குரு கோபிந்த் சிங், ஜியின் புதல்வர்களின் துணிச்சலையும் தியாகத்தையும் போற்றும் வகையில் வீர் பால் திவாஸ் கொண்டாடப்படுகிறது. இதுபோன்ற திறமையான குழந்தைகளுக்கான விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்ததற்காக ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் அன்னபூர்ணா தேவியை பாராட்டுகிறேன்.

வீர் பால் திவாஸ் என்பது தேசபக்தி, துணிச்சல் மற்றும் தேசிய ஒற்றுமையை நினைவுகூரும் நாள் மற்றும் கொண்டாட்டமாகும். இளம் மனங்களை ஊக்குவிப்பதில் பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று விருதை வழங்குவதன் மூலம், நீங்கள் ஊக்கப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள். இந்த அங்கீகாரம் நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் சிறந்து விளங்க பாடுபட ஊக்குவிக்கும்,’’ என்றார்.

* வைபவ் சூர்யவன்ஷிக்கு விருது
இந்த நிகழ்ச்சியில் வளர்ந்து வரும் இளம் இந்திய கிரிக்கெட் வீரர், வைபவ் சூர்யவன்ஷி(14)க்கு, ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பூங்காவில் மின்சாரம் தாக்கிய 6 வயது சிறுவனை காப்பாற்ற முயன்று உயிரிழந்த 8 வயது சிறுமி வியோமா பிரியாவுக்கும், பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய ராணுவ வீரர்களுக்கு பால், தேநீர், தயிர் உள்ளிட்டவற்றை வழங்கி உதவிய சிறுவனுக்கும் விருது வழங்கப்பட்டது. வியோமா பிரியாவுக்கான விருதை அவரது தாய் அர்ச்சனா சிவராம கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

Related Stories: