மதுராந்தகம், டிச.27: புத்திரன் கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் பயன்பாடு இல்லாத பழமையான சீமை ஓடு கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக இரண்டு வகுப்பறை கட்டிடத்தை கட்டி தர வேண்டும், என கிராம மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர். சித்தாமூர் ஒன்றியம், புத்திரன் கோட்டை ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்பப்பள்ளி நூற்றாண்டுகள் பழமையான பள்ளியாக அந்த கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஏராளமான கிராமப்புற மாணவர்கள் கல்வி பயின்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்த சீமை ஓடு கட்டிடத்தில் பள்ளி செயல்பட்டு வந்தது.
இதனால், போதிய வகுப்பறை கட்டிடம், அடிப்படை வசதி இல்லாததாலும் தமிழ்மொழி மற்றும் ஆங்கிலவழி கல்வி கற்க அப்பகுதி கிராம மக்கள் தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்தனர். அந்தப் பள்ளியில் புதிதாக பள்ளிகட்டிடம், சத்துணவு கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தற்பொழுது செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு 50க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வருகின்றனர். மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள 60 ஆண்டுகள் பழமையான சீமை ஓடு கட்டிடம் பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. அந்த கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு மேலும் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடத்தை அரசு கட்டிக் கொடுத்தால் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். எனவே இரண்டு வகுப்பறை கட்டிடங்களை கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.
