சென்னை: சென்னையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நமது மக்கள் முன்னேற்றக்கழக நிறுவன தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழக கேரள எல்லையில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான கண்ணகி கோயில் சிதலமடைந்து இருக்கிறது. இந்த கோயிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்தி தமிழர்களின் அடையாளத்தை காக்கவேண்டும். கண்ணகி கோவிலுக்கு தமிழக பகுதியில் உள்ள புளியங்குடி வழியாக பாதை அமைக்கும் பணியை விரைவாக தொடங்கவேண்டும்.
ஒவ்வொரு தமிழ் மாத பௌர்ணமி நாளில் கண்ணகி கோவிலுக்கு சென்றுவர அனுமதி அளிக்கவேண்டும். குமுளி பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப் பட்டுள்ள பேருந்து நிலையத்துக்கு கண்ணகி பெயர் சூட்டவேண்டும். கம்பத்தில் சுதந்திர போராட்ட வீரர் கப்ப லோட்டிய தமிழனுக்கு ஊரின் மையப்பகுதியில் அவரது உருவ சிலை அமைக்கவேண்டும் என்ற மக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. தமிழ்நாட்டில் டி.என்.டி.ஒற்றை சான்றிதழ் வழங்கவேண்டும். குறிப்பாக, சட்டம் 45/1994-ன் சரத்து 7ன் கீழ் அரசுக் அரசாணை மூலம் டி.என்.சியை திருத்தி டி.என்டியாக மாற்ற அதிகாரம் உள்ளது என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதனடிப்படையில் ஒற்றை சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
சந்திப்பின்போது, அமைச்சர் கே.என்.நேரு, தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், நமது மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் பொதுச்செயலாளர் பார்மா கணேசன், மாநில அமைப்பு செயலாளர் தமிழ்ச்செல்வன், துணைப் பொது செயலாளர் செல்வேந்திரன், மாநில இளைஞரணி செயலாளர் எம்.எஸ். மணி, மாநில சிறுபான்மைப்பிரிவு செயலாளர் ஹக்கீம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். முதலமைச்சரை சந்தித்துவிட்டு வெளியில் வந்த ஜெகநாத் மிஸ்ரா செய்தியாளரிடம் கூறியதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். தமிழக மக்களின் நீண்டநாள் கோரிக்கையான கண்ணகி கோயில் குறித்தும் அந்த கோயிலுக்கு பாதை வேண்டியும் மனு அளித்தோம். எங்களின் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். நாங்கள் அரசியல் ஏதும் பேசவில்லை. முழுக்க முழுக்க கோரிக்கை தொடர்பாகவே பேசினோம். கூட்டணி குறித்து கட்சியின் பொதுக்குழு, செயற்குழுதான் முடிவு செய்யும். இவ்வாறு கூறியுள்ளார்.
