சுனாமி 21ம் ஆண்டு நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

 

சென்னை: சுனாமி 21ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கடலோர மாவட்டங்களில் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தோனேஷியா சுமத்ரா தீவில் கடலுக்குள் நிகழ்ந்த நிலநடுக்கம் ஆழிப் பேரலையை உருவாக்கி இந்தியா, இலங்கை, மாலத்தீவு, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பெரும் அழிவை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி முதல் சென்னை வரையுள்ள 14 கடலோர மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். தமிழகத்திலேயே நாகை மாவட்டத்தில் இறப்பு அதிகமாகும். நெஞ்சை விட்டு நீங்காத இந்த சம்பவத்தை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிச. 26ம் தேதி சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

நாகை நம்பியார்நகர், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, நாகூர் பட்டினச்சேரி, சாமந்தான்பேட்டை, வேளாங்கண்ணி, வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் சுனாமியில் இறந்தவர்களுக்கு உறவினர்கள் இன்று தர்ப்பணம் செய்தனர். பின்னர் கடலோர பகுதிகளில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். நாகை மாவட்ட திமுக சார்பில் ஆரிய நாட்டு கடற்கரையில் உள்ள சுனாமி நினைவு தூணில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நாகை கீச்சாங்குப்பத்தில் சுனாமி நினைவு தூண் முன்பு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுனாமியால் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய யாகம் வளர்த்தனர். பின்னர் நினைவு தூணில் மலர்தூவினர்.

கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சுனாமியின் போது கீச்சாங்குப்பம் பள்ளியில் படித்து இறந்த மாணவ, மாணவிகளின் நினைவாக மவுன ஊர்வலம் சென்றனர். பின்னர் பள்ளியில் சுனாமியில் உயிரிழந்த மாணவ, மாணவிகளின் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர்தூவிவும் அஞ்சலி செலுத்தினர். அக்கரைப்பேட்டை மீனவ கிராமம் சார்பில் டாடா நகர் சுனாமி குடியிருப்பில் இருந்து மவுன ஊர்வலம் நடந்தது. நாகை நம்பியார் நகர் சமுதாயக் கூடம் அருகே உள்ள சுனாமி நினைவு தூணில் மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுனாமி நினைவு தூணில் கலெக்டர் ஆகாஷ் அஞ்சலி செலுத்தினர்.

வேளாங்கண்ணி பேராலயத்தில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் இருந்து சுனாமி நினைவிடம் வரை மீனவர்கள் சார்பில் மவுன ஊரவலம் நடந்தது. பூம்புகாரில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபியில் மீனவர்கள். பொதுமக்கள் மெழுகு வர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். காரைக்கால் அடுத்த பூவம் பகுதியில் உறவினர்கள் மற்றும் மீனவர்கள் இறந்தவர்களின் சமாதியில் மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். சுனாமி நினைவு தினத்தையொட்டி நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் சுமார் 1.50 லட்சம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

குமரி
குமரி மாவட்டத்தில் குளச்சல், கொட்டில்பாடு, மணக்குடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் கொத்து, கொத்தாக உயிர்கள் பலியாகின. குமரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 800க்கும் அதிகமானோர் இறந்தனர். இதையொட்டி குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சிறப்பு திருப்பலி மற்றும் கல்லறை தோட்டங்களில் மலரஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் சுனாமிக்கு குழந்தைகள், பெண்கள் உள்பட 199 பேர் உயிரிழந்தனர். இவர்களது உடல்கள் கொட்டில்பாடு ஊர் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கொட்டில்பாடு ஊரில் நினைவு ஸ்தூபியும் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வில்ைல. இன்று மாலையில் குளச்சல் புனித காணிக்கை அன்ைன ஆலய வளாகத்தில் 414 பேர் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலரஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது. ஆலயத்தில் நினைவு திருப்பலியும் நடக்கிறது. மணக்குடி கிராமத்தில் 118 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை ேதாடத்தில் இன்று உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். மணக்குடியில் உள்ள அந்திரேயா ஆலயத்தில் பங்கு தந்தை தலைமையில் நினைவு திருப்பலி நடைபெற்றது. பின்னர் மவுன ஊர்வலமும் நடந்தது.

கடலூர்
கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுனாமி பேரலையில் சிக்கி 610 பேர் பலியாகினர். 21ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கடலூர் முதுநகர் சிங்காரத்தோப்பில் உள்ள சுனாமி நினைவுத் தூணுக்கு சுனாமியில் பலியானவர்களின் உறவினர்கள் மலர் வளையம் வைத்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு மீனவர் பேரவை, மீனவர் வேங்கைகள் உள்ளிட்ட பல்வேறு மீனவர் அமைப்பு சார்பில் மீனவர் கிராம அமைப்பினர் சார்பாகவும் பொதுமக்கள் ஊர்வலமாக சென்று கடற்கரையில் அஞ்சலி செலுத்தினர். அப்போது பெண்கள் கடலில் பால் ஊற்றியும் மலர்தூவியும், துக்கம் தாங்காமல் கதறி அழுதனர். கடற்கரை மணலில் மெழுகுவர்த்தி ஏற்றியும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கடலூர் மாவட்ட மீனவர்கள் யாரும் இன்று மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை. இதேபோல் தமிழகம் முழுவதும் சுனாமியில் இறந்தவர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Stories: