தொப்பூர் கணவாயில் கார்கள், கன்டெய்னர் லாரி உள்பட 11 வாகனங்கள் மோதி விபத்து

*டிரைவர்கள் உள்பட 3 பேர் படுகாயம்

*5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

நல்லம்பள்ளி : தொப்பூர் கணவாயில், 3 இடங்களில், கன்டெய்னர் லாரி, கார்கள் உள்பட 11 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தால் 5 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து இரும்பு பைப் ஏற்றிய லாரி ஒன்று, நாகர்கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தது.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தொப்பூர் கணவாய் அருகே, நேற்று அதிகாலை சுமார் 1 மணியளவில் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, ஆஞ்சநேயர் கோவில் அருகில் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், டிரைவர் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதே போல், தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், கன்டெய்னர் லாரி ஒன்று சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த லாரி நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் கணவாய், தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில், தாறுமாறாக ஓடியது.

அதனை தொடர்ந்து, தொப்பூர் கணவாய் சென்டர் மீடியங்களில் மோதி விபத்துக்குள்ளானது. மேலும், அடுத்தடுத்து ஒரு லாரி, கார், டெம்போ ஆகிய வாகனங்களும் மோதி விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் கன்டெய்னர் லாரியில், வந்த இரண்டு டிரைவர்களும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார், படுகாயம் அடைந்த 2 டிரைவர்களை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கிறிஸ்மஸ் விழாவையொட்டி, தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால், ஏராளமானவர்கள் கார்களில் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.

இதனால் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. சேலத்தை நோக்கி கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்லும் போது, வெள்ளக்கல் பகுதியில், சென்டர் மீடியனின் அருகே கார் வேகத்தை குறைத்ததால், பின்னால் வந்த அடுத்தடுத்து 6 கார்கள் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கார்கள் மட்டும் சேதம் அடைந்த நிலையில், யாரும் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நேற்று ஒரே நாளில் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று விபத்துகள் நடைபெற்ற நிலையில் 11 வாகனங்கள் விபத்தில் சிக்கியது.

இதன் காரணமாக தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 5 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: