×

குஜராத் மாநிலம் கச் மாவட்டத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு

கச்: இன்று அதிகாலை சுமார் 4:30 மணியளவில் குஜராத் மாநிலம் கச் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமியின் அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம்  ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பெரும் அச்சமடைந்தனர்.

அதிகாலை நேரம் என்பதால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள், நில அதிர்வை உணர்ந்ததும் திடுக்கிட்டு எழுந்தனர். வீடுகளில் இருந்த மின்விசிறிகள் மற்றும் பொருட்கள் ஆடியதால் அச்சமடைந்த பொதுமக்கள், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் சில நொடிகள் மட்டுமே நீடித்தது. நல்வாய்ப்பாக, இதில் உயிரிழப்புகளோ அல்லது பெரிய அளவிலான சொத்து சேதங்களோ ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னதாக, கடந்த டிசம்பர் 20ம் தேதி குஜராத்தின் பரூச் மாவட்டத்திலும் நில அதிர்வு உணரப்பட்டது. அன்று காலை 4:56 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவான அந்த நிலநடுக்கத்தின் மையம் ஜம்புசார் அருகே இருந்தது குறிப்பிடத்தக்கது.

குஜராத் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (GSDMA) தகவல்படி, கச் மாவட்டம் மிகவும் அபாயகரமான நில அதிர்வு மண்டலத்தில் (Active Seismic Zone) அமைந்துள்ளது. கடந்த 200 ஆண்டுகளில் குஜராத்தில் 9 பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை கச் பகுதியையே மையமாகக் கொண்டிருந்தன.

குறிப்பாக, 2001-ஆம் ஆண்டு கச் – புஜ் பகுதியில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பெரும் பேரழிவை ஏற்படுத்தியது. அதில் சுமார் 13,800 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1.67 லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kutch district of Gujarat ,Kutch ,Kutch district of ,Gujarat ,earth ,
× RELATED வயநாடு பகுதியில் அச்சுறுத்தலை...