×

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை சீர்குலைக்க பாஜ ஆளும் மாநிலங்களில் தேவாலயங்கள் மீது தாக்குதல்; இந்து மதவாத கும்பலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்; இரும்புக்கரம் கொண்டு அடக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்த வேளையில் அதை சீர்குலைக்கும் வகையில் பாஜ ஆளும் பல மாநிலங்களில் தேவாலயங்கள் மீதும் கிறிஸ்தவ மக்கள் மீதும் இந்து அமைப்பு மதவாத கும்பல்கள் தாக்குதல்களை நடத்தின. ம.பி, ராஜஸ்தான்,சத்தீஸ்கர் மாநிலங்களில் இச் சம்பவங்கள் அரங்கேறின. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாட்டுமக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று கிறிஸ்தவர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் விழாவை சீர்குலைக்கும் நோக்கில் கிறிஸ்தவ தேவாலயங்கள், கிறிஸ்தவர்கள் மீது இந்து அமைப்பினர் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்திய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. பாஜ ஆளும் ராஜஸதானில் உள்ள துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள பிச்சிவாரா கிராமத்தில் உள்ள கத்தோலிக்க ஆலயத்தில் அண்மையில் ஆர்எஸ்எஸ், பஜ்ரங் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். பாஜ ஆளும் ம.பி.யில் கிறிஸ்தவர்கள் மீது 2 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன.

ஜபல்பூரில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்திற்குள் புகுந்த நகர பாஜ துணைத் தலைவர் அஞ்சு பார்கவா ரகளையில் இறங்கினார். அந்த கூட்டத்தில் பங்கேற்ற பார்வையற்ற பெண்ணை அவர் தாக்கியது வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வைரலானது. அங்குள்ள மற்றொரு தேவாலயத்திற்குள் கடந்த வாரம் அத்துமீறிய இந்து அமைப்பினர் அங்கிருந்தவர்கள் மீது நாற்காலிகளை தூக்கிவீசி வன்முறையில் இறங்கினர். பாரதிய ஜனதா ஆட்சி நடத்தும் சட்டீஸ்கரில் கிறிஸ்தவர் ஒருவரின் இறுதி சடங்கில் பிரச்னை எழுப்பிய இந்துத்துவா அமைப்புகள் அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை சூறையாடி, தீக்கிரையாக்கினர்.

ஒடிசாவில் கிறிஸ்துமஸ் தாத்தா அணியும் தொப்பிகளை விற்பனை செய்த வியாபாரிகள் இந்து அமைப்பினரால் மிரட்டப்பட்டனர். டெல்லியில் கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்த பெண்களை பஜ்ரங் தளத்தினர் விரட்டியடித்தனர். ஒடிசாவிலும் பாஜ ஆட்சி நடப்பது குறிப்பிடத்தக்கது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் இரவில் கேரல் பாடல்களை பாடச் சென்ற சிறுவர்களை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தடுத்து தகாத வார்த்தைகளால் பேசினர். நாடு முழுவதும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக கடந்த ஓராண்டில் 600 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாக ஐக்கிய கிறிஸ்தவ கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

சிறுபான்மையினர் மீதான இத்தகைய தாக்குதல் சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது; குணமும் இருக்கிறது. பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுவது, அதுவும்-பிரதமர் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும்.

மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, இப்போது ஜபல்பூர்-ராய்ப்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒன்றிய பா.ஜ. அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74% அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படும் புள்ளிவிவரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது. எனவே, நாட்டுமக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: சக மனிதர்களையும் நேசியுங்கள் என்று அன்பையும், காருண்யத்தையும் போதித்த மனிதகுல ரட்சகர் இயேசுநாதரின் பிறந்தநாள் விழாவாக உலகெங்கும் கிறிஸ்தவப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் ராய்ப்பூர், ஜபல்பூர் ஆகிய இடங்களிலும், சத்தீஸ்கர் மாநிலத்தின் சில இடங்களிலும் கிறித்துவ தேவாலயங்களை, கிறித்தவ மக்களை தாக்கிய இந்துத்துவ வெறிக் கும்பலுக்கு பலத்த கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். அந்த வன்முறையாளர்களை, சம்பவம் நடைபெற்ற மாநிலங்களின் அரசுகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை: நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை அமைதியுடனும், சகோதரத்துவ உணர்வுடனும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சில மாநிலங்களில் மதவாத கும்பல்கள் திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைச் சீர்குலைத்துள்ள சம்பவங்கள் மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கின்றன. மதச்சார்பற்ற இந்திய அரசியலமைப்பின் அடிப்படை நெறிகளுக்கு எதிராக, ஒரு குறிப்பிட்ட மதத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது ஜனநாயகத்திற்கும், மனித உரிமைகளுக்கும் பேராபத்தாகும். பண்டிகை நாட்களில்கூட மதவெறியை விதைத்து, சமூக ஒற்றுமையை குலைக்கும் இத்தகைய செயல்கள் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. மதவாத கும்பல்களின் இந்த வன்முறைகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மதத்தினரும் அச்சமின்றி, பாதுகாப்புடன் தங்கள் பண்டிகைகளை கொண்டாட ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமைதி, சகோதரத்துவம் மற்றும் அன்பின் செய்தியை உலகிற்கு எடுத்துச் செல்லும் நேரத்தில், கிறிஸ்தவர்களைக் குறிவைத்து பாஜ ஆளும் மாநிலங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கின்றன. பண்டிகை காலங்களில் சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய வன்முறை செயல்கள், இந்திய அரசமைப்புச் சட்டம் உறுதி செய்த மதச்சார்பின்மை, மத சுதந்திரம், சமத்துவம் ஆகிய அடிப்படை மதிப்புகளுக்கு நேரான சவாலாகும். இந்த தாக்குதல்களுக்கு பின்னால் உள்ளவர்களை உடனடியாகக் கண்டறிந்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை. மேலும், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மத வெறுப்பையும் அச்சத்தையும் விதைக்கும் சக்திகளுக்கு எதிராக ஜனநாயகமும் மனிதநேயமும் கொண்ட அனைத்துச் சக்திகளும் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய நேரம் இது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் ஏ.முஜீபுர் ரஹ்மான்: கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு டெல்லி, சத்தீஸ்கர், குஜராத், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் அமைதியாக வழிபாட்டில் ஈடுபட்ட கிறிஸ்துவர்கள் மீது சங்பரிவார கும்பல்கள் கொடூரமான தாக்குதல்கள் நடத்தியுள்ளன. அமைதியும் சகிப்புத்தன்மையும் இந்தியாவின் அடையாளமாக இருக்க வேண்டிய நிலையில், சிறுபான்மையினரைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும் இத்தகைய தாக்குதல்கள், அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள மத சுதந்திரத்திற்கும், மனித உரிமைகளுக்கும் நேரடியான சவாலாக அமைந்துள்ளன. எனவே, இத்தாக்குதல்களில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகள் மீதும் உடனடியாகவும், கடுமையாகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக மாண்புகளைப் பாதுகாத்து, நாட்டிலுள்ள சிறுபான்மையின மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதே போல பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

* பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுவது, அதுவும்-பிரதமர் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும். ஒன்றிய பா.ஜ. அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74% அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படும் புள்ளிவிவரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது..’’ – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Tags : BJP ,Christmas ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,
× RELATED சென்னையில் தெருக்கள், சாலைகளை தரமாக...