×

மேடவாக்கத்தில் ஒன்றிய அரசை கண்டித்து மதசார்பற்ற கூட்டணி கட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி, வைகோ, திருமாவளவன் பங்கேற்பு

சென்னை: மகாத்மா காந்தியடிகள் பெயரை நீக்கி, 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்துள்ள ஒன்றிய பாஜ அரசை கண்டித்து, சென்னை தெற்கு மாவட்டம், புனித தோமையார்மலை தெற்கு ஒன்றிய திமுக சார்பில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் மேடவாக்கத்தில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்), திருமாவளவன் (விசிக), வைகோ (மதிமுக), கே.வீ.தங்கபாலு (காங்கிரஸ்), காதர் மொகிதீன் (ஐயுஎம்எல்), வேல்முருகன் (தவாக), ஈஸ்வரன் (கொமதேக), அருணாசலம் (மநீம) உள்பட பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் திமுக எம்பிக்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி சோமு, தலைமை நிலைய செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைமேயர் மகேஷ்குமார், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ஏஎம்வி.பிரபாகரராஜா, காரம்பாக்கம் கணபதி, அரவிந்த் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை மதிமுக தலைவர் வைகோ துவக்கி வைத்தார். முன்னதாக, பெரியார் நினைவு நாளை முன்னிட்டு, மேடையில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப் படத்துக்கு அனைவரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், ‘இந்த 100 நாள் வேலை உறுதி திட்டத்தை 2 காரணங்களுக்காக பெயரை மாற்றியுள்ளனர். இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. அதில் ஒன்று, அவர்களுக்கு காந்தியின் பெயர் அறவே பிடிக்காது. காந்தி என்கிற பெருங்கோட்டுக்கு முன்னால் மற்றொரு மிகப்பெரிய கோட்டை இழுத்து, காந்தியை சிறு கோடாக ஆக்கி சிறுமைப்படுத்துவதற்காகவே இக்கும்பல் இதுபோன்ற செயல்களை செய்து வருகின்றனர். இவர்களின் உள்நோக்கத்தை புரிந்துகொண்ட காரணத்தினால்தான் இவர்களை அம்பலப்படுத்த வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தல், மற்றவற்றைவிட மிக ஆபத்தான தேர்தல் என்பதை உணர்ந்து, அதை நாம் கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பாசிச மற்றும் சனாதன சக்திகளுக்கு நாம் ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது என்பதை சொல்லி, இதுதொடர்பான தமிழக முதல்வரின் முயற்சிகளுக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்போம்’ என்றார். இதேபோல தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.

தொடர்ந்து மதிமுக தலைவர் வைகோ அளித்த பேட்டியில், ‘எந்த காரணத்தால் காந்தியின் பெயரை நீக்கினார்கள். இந்தியாவிற்கு பாரத் என்றும் தலைநகர் டெல்லி அல்ல வாரணாசி என்று மாற்ற துடிக்கிறார்கள். திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த பெயர் நீக்கம். காந்தி பெயரை எந்த அடிப்படையில் நீக்கினீர்கள். அதற்கு பதில் சொல்லமுடியாது. காந்தியை கோட்சே கொன்றது போல தற்போது மோடி கொன்றுள்ளார். இந்தியாவை தெரியாதவர்களுக்கு கூட காந்தியை தெரியும்’ என்றார்.

Tags : SECULAR COALITION PARTY ,UNION STATE ,MEDABAKH ,K. Veeramani ,Vigo ,Thirumaalavan ,Chennai ,Southern District of ,Sindh Domaiarmala ,Union Government ,Mahatma Gandhi ,
× RELATED ஓபிஎஸ் 2 நாளில் நல்ல முடிவு தவெக – அமமுக...