×

‘சாத் சமுந்தர் பார்’ பாடல் ரீமிக்ஸ் சர்ச்சை; நடிகை அனன்யா படத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு: திட்டமிட்டபடி நாளை ரிலீஸ்

 

மும்பை: பிரபலமான ‘சாத் சமுந்தர் பார்’ பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்ட புதிய திரைப்படத்திற்குத் தடை விதிக்க மும்பை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 1992ம் ஆண்டு வெளியான ‘விஷ்வத்மா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சாத் சமுந்தர் பார்’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலின் இசை மற்றும் வரிகளுக்கான முழு காப்புரிமை தங்களுக்கே சொந்தம் என்றும், சரிகம நிறுவனத்திற்கு கேசட் மற்றும் ரெக்கார்டுகளுக்கு மட்டுமே உரிமை வழங்கப்பட்டதாகவும் கூறி, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான த்ரிமூர்த்தி பிலிம்ஸ் வழக்கு தொடர்ந்திருந்தது.

தற்போது தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், நடிகர் கார்த்திக் ஆர்யன் மற்றும் நடிகை அனன்யா பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள ‘து மேரி மே தேரா மே தேரா து மேரி’ என்ற படத்தில் அந்தப் பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மா நிறுவனம், சரிகம மற்றும் ராப் பாடகர் பாட்ஷா ஆகியோர் மீது ரூ.10 கோடி நஷ்ட ஈடு கோரியும், படத்திற்குத் தடை விதிக்கக் கோரியும் த்ரிமூர்த்தி பிலிம்ஸ் அவசர மனு தாக்கல் செய்திருந்தது. கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு 25ம் தேதி (நாளை) உலகம் முழுவதும் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இந்த வழக்கை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ஷர்மிளா தேஷ்முக் நேற்று விசாரித்தார்.

அப்போது வாதங்களைக்கேட்ட நீதிபதி படத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டார். இதுகுறித்து நீதிபதி கூறுகையில், ‘ஏற்கனவே 2014ம் ஆண்டு ‘கிக்’ படத்தில் இப்பாடல் பயன்படுத்தப்பட்டபோது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? டீசர் வெளியாகி நீண்ட நாட்களுக்குப் பிறகு, படம் வெளியாகும் கடைசி நேரத்தில் வழக்கு தொடர்வது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினார். மேலும், ‘திரைப்படத் தயாரிப்பில் பெரிய முதலீடு செய்யப்பட்டுள்ளதால், தற்போது படத்திற்குத் தடை விதிப்பது சரியாக இருக்காது’ என்று கூறி வழக்கை ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார். நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் திட்டமிட்டபடி திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Tags : Ananya ,Mumbai ,Bombay High Court ,
× RELATED மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்த போது...