டொராண்டோ: கனடாவில் மாயமான இந்திய வம்சாவளிப் பெண் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தலைமறைவான அவரது காதலனை கொலைக் குற்றவாளியாக அறிவித்துப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கனடாவின் டொராண்டோ நகரில் வசித்து வந்த இந்திய வம்சாவளி ஹிமான்ஷி குரானா (30) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் காணாமல் போனதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், சனிக்கிழமை காலை நகரின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஹிமான்ஷி குரானா சடலமாக மீட்கப்பட்டார்.
சந்தேகத்திற்குரிய மரணம் என்பதால் விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார், இச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் அந்தப் பெண்ணின் காதலன் அப்துல் கபூரி என்பவரை கொலைக் குற்றவாளியாக அறிவித்துள்ளனர். மேலும் அவருக்கு எதிராக நாடு தழுவிய பிடிவாரண்ட் பிறப்பித்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து கனடாவுக்கான இந்தியத் தூதரகம் கவலை தெரிவித்துள்ளதுடன், விசாரணைக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. சமீபகாலமாக வெளிநாடுகளில் இந்தியப் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
