புதுச்சேரி: புதுச்சேரியில் போலி மருந்து மோசடி வழக்கில் முன்னாள் ஐ.எப்.எஸ். அதிகாரியும், பாஜக ஆதரவு பிரமுகருமான சத்தியமூர்த்தியை சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று அதிரடியாக கைது செய்தனர். மேலும் முக்கிய அதிகாரிகளையும் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகின்றன. புதுச்சேரியில் நடந்த போலி மருந்து மோசடியில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளதாக அடுத்தடுத்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி வருகின்றன. ஏற்கனவே இவ்வழக்கில் 16 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தன. இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. இதனிடையே அரியாங்குப்பத்தை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் மணிகண்டன் உள்ளிட்ட 4 பேர் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக முக்கிய குற்றவாளி ராஜா (எ) வள்ளியப்பனை சிபிசிஐடி போலீசார் 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இன்றுடன் விசாரணை முடிவடையும் நிலையில், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கவர்னர் கைலாஷ்நாதன் கடந்த 22ம்தேதி இவ்வழக்கை சிபிஐ மற்றும் என்.ஐ.ஏ அமைப்புகளும் விசாரிக்க பரிந்துரைத்தார். இந்நிலையில் சிறப்பு புலனாய்வு குழு, ராஜாவிடம் நடத்திய விசாரணையில், போலி மருந்து தயாரிப்பு மூலம் கிடைத்த வருமானத்தில் ஜிஎஸ்டி செலுத்தாமல் இருக்க முன்னாள் ஐ.எப்.எஸ். அதிகாரி சத்தியமூர்த்தி உதவி செய்ததாகவும், இதற்கு புதுச்சேரி ஜிஎஸ்டி அலுவலகத்தில் பணிபுரியும் மற்றொரு முக்கிய அதிகாரி உடந்தையாக இருந்து, பலகோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த பகீர் தகவலும் கிடைத்தது. இதையடுத்து சத்தியமூர்த்தியை ஒசூரில் சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று அதிரடியாக கைது செய்தனர்.
தொடர்ந்து, ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் பணியாற்றும் உயரதிகாரி ஒருவரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகின்றன. மேலும் போலி மருந்து தயாரிப்புக்கு தொழிற்துறை மாசு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள தகவல் கிடைத்துள்ள நிலையில், இத்துறையில் தொடர்புடைய முக்கிய அதிகாரி ஒருவரையும் பிடித்து சிறப்பு புலனாய்வு குழு ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிகிறது. இதற்கிடையே சிபிஐ விசாரணைக்கு இவ்வழக்கை கவர்னர் பரிந்துரைத்திருந்த நிலையில், வருகிற 6ம்தேதி முதல் சிபிஐ அதிகாரிகள் புதுச்சேரி வந்து விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யும் நடவடிக்கையில் சிறப்பு புலனாய்வு குழு இறங்கியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜ தலைவர் பதவிக்கான போட்டியில் சத்தியமூர்த்தி
புதுவை வனத்துறையில் துணை வனப் பாதுகாவலராக பணியாற்றியவர் ஐஎப்எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி. 2023ல் அந்தமானுக்கு இடமாற்றம் செய்யப்பட்டும் புதுச்சேரியிலே அவர் தங்கியிருந்தார். இதனால் 2024 புதுச்சேரி மக்களவை தேர்தலில் சத்தியமூர்த்தி பாஜகவில் போட்டியிடலாம் என தகவல் வெளியாகின. அந்தமானுக்கு செல்லாமல் இருந்தது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்ட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், அவரை பணியிடை நீக்கம் செய்தது. இதனிடையே சத்தியமூர்த்தி தனது பதவியை ராஜினாமா செய்து ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பி விட்டதாகவும் கூறப்பட்டது. அதன்பிறகு புதுச்சேரி பாகூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நலப்பணிகளை சத்தியமூர்த்தி செய்து வருகிறார். பிரதமர் மோடி பிறந்தநாளில் தனது நிகழ்ச்சிக்கு கவர்னரை வரவழைத்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனால் சட்டசபை தேர்தலில் பாஜவில் அல்லது சுயேட்சையாக போட்டியிடலாம் என தகவல் வெளியாகின. ஏற்கனவே புதுச்சேரி பாஜ தலைவர் பதவிக்கான போட்டியிலும் சத்தியமூர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
