மேடவாக்கத்தில் ஒன்றிய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி, வைகோ, திருமாவளவன் பங்கேற்பு

 

வேளச்சேரி: மகாத்மா காந்தியடிகள் பெயரை நீக்கி, 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்துள்ள ஒன்றிய பாஜ அரசை கண்டித்து, சென்னை தெற்கு மாவட்டம், புனித தோமையர்மலை தெற்கு ஒன்றிய திமுக சார்பில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில், தாம்பரம் அருகே மேடவாக்கத்தில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கே.பாலகிருஷ்ணன் (சிபிஐ-எம்), மு.வீரபாண்டியன் (சிபிஐ), தொல்.திருமாவளவன் (விசிக), வைகோ (மதிமுக), கே.வி.தங்கபாலு (காங்கிரஸ் ), காதர் மொகைதீன் (ஐயுஎம்எல்), தி.வேல்முருகன் (தவாக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), அருணாசலம் (மநீம) உள்பட பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் திமுக எம்பிக்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி சோமு, தலைமை நிலைய செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைமேயர் மு.மகேஷ்குமார், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ஏஎம்வி.பிரபாகரராஜா, காரம்பாக்கம் கணபதி, அரவிந்த்ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை மதிமுக தலைவர் வைகோ துவக்கி வைத்தார். முன்னதாக, இன்று பெரியார் நினைவு நாளை முன்னிட்டு, மேடையில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்துக்கு அனைவரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசுகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை, ஆர்எஸ்எஸ் இயக்க வழிகாட்டுதலின்படி ஒன்றிய பாஜ அரசு திட்டமிட்டு சிதைத்து வருகிறது. 100 நாள் வேலை திட்டத்தை காலி செய்த அரசாக, ஒன்றிய பாஜ அரசு தன்னை பதிவு செய்து கொண்டுள்ளது. கொரோனா நெருக்கடி காலத்தில் வேலை இழந்த கோடிக்கணக்கான மக்களுக்கு இடையே, ஒரே நாளில் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகள் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு லாபமடைந்துள்ளனர். ஒன்றிய பாஜ அரசு ஏழை, எளிய மக்களுக்கானது அல்ல, முதலாளிகளுக்கான ஆட்சி. 100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தியின் பெயர் நீக்கும் நடவடிக்கையின் பின்னணியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் சிந்தனையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தின் நிதிச் சுமையை, அந்தந்த மாநில அரசுகளின்மீது தள்ளிவிட்டு, தனது பொறுப்பை ஒன்றிய பாஜ அரசு தவிர்த்துள்ளது.

ஏழைகளுக்கு சலுகை என்ற பெயரில், சமூகநீதி கருத்தை சிதைக்கும் முயற்சி நடக்கிறது. இப்போராட்டம் பெரியாரின் நினைவு நாளில் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் மதவெறி அரசியலுக்கும் விஷம அரசியலுக்கும் இடமில்லை என்று கி.வீரமணி தெரிவித்தார். பின்னர் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், இந்த 100 நாள் வேலை உறுதி திட்டத்தை 2 காரணங்களுக்காக பெயரை மாற்றியுள்ளனர். இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. அதில் ஒன்று, அவர்களுக்கு காந்தியின் பெயர் அறவே பிடிக்காது. காந்தி என்கிற பெருங்கோட்டுக்கு முன்னால் மற்றொரு மிகப்பெரிய கோட்டை இழுத்து, காந்தியை சிறு கோடாக ஆக்கி சிறுமைப்படுத்துவதற்காகவே இக்கும்பல் இதுபோன்ற செயல்களை செய்து வருகின்றனர். அன்றைக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு கொண்டு வந்ததில் ஒன்றுதான், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம். விவசாய தொழிலை நம்பியிருக்கிற விவசாய மக்கள், தங்களின் வருமானத்தை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்டதுதான் 100 நாள் வேலை திட்டம். இதில் காந்தி பெயரை நீக்க வேண்டும் எனக் குறியாக இருந்து, தற்போது நீக்கிவிட்டார்கள்.

இதுபோன்று பல்வேறு அரசியல் நெருடிக்கடியான சூழலில்தான், நாம் இன்றைக்கு ஒருங்கிணைந்து இருக்க வேண்டிய காலத்தின் தேவை உருவாகி இருக்கிறது. இவர்களின் உள்நோக்கத்தை புரிந்து கொண்ட காரணத்தினால்தான் இவர்களை அம்பலப்படுத்த வேண்டும் என்றார் இதேபோல தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.

Related Stories: